திருமூர்த்தி அணையில் இருந்து 26-ந் தேதி தண்ணீர் திறக்க முடிவு

2-ம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையில் இருந்து வருகிற 26-ந்தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.;

Update:2022-08-17 22:14 IST

பொள்ளாச்சி

2-ம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையில் இருந்து வருகிற 26-ந்தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து 2-ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முன்னாள் திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறுகையில், ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை பி.ஏ.பி. விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த மாட்டோம் என்று அரசு கூறி உள்ளது. இதை மீறி செயல்படுத்த நினைத்தால் கண்டிப்பாக திட்டத்தை நிறைவேற்ற பாசன சபை தலைவர்கள், உறுப்பினர்கள் விடமாட்டோம். எந்த போராட்டத்தை வேண்டுமானாலும் கையில் எடுக்க தயங்க மாட்டோம் என்றார்.

பி.ஏ.பி. திட்ட கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் பேசும்போது கூறியதாவது:-

26-ந்தேதி தண்ணீர் திறப்பு

திருமூர்த்தி அணையில் இருந்து 2-ம் மண்டல பாசனத்திற்கு வருகிற 26-ந்தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 4 சுற்றுக்கள் தண்ணீர் வழங்கப்படும். தண்ணீர் திறப்பது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். கால்வாய்களை சீரமைக்க ரூ.7 கோடி நிதி கேட்கப்பட்டு உள்ளது. நிதி வந்ததும் பணிகள் மேற்கொள்ளப்படும். நிதி வராதபட்சத்தில் பராமரிப்பு நிதியை கொண்டு முடிந்த அளவிற்கு கால்வாய்கள் சீரமைக்கப்படும். கால்வாய் சீரமைப்பிற்கு 100 நாள் திட்ட பணியாளர்களை பணி அமர்த்துவது குறித்து கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மாதந்தோறும் பாசன சபை சங்க கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் அந்தந்த பகுதி உதவி பொறியாளர்கள் கலந்துகொள்வார்கள். காண்டூர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் செயற்பொறியாளர் ரவி, கோபி, உதவி செயற்பொறியாளர் சக்திகுமார், ஆனந்தபாலதண்டாயுதபானி, அசோக்பாபு, ஆதிசிவன், வடிவேல் மற்றும் உதவி பொறியாளர்கள், பாசன சபை தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


கால்வாய்களை தூர்வார வேண்டும்

விவசாயிகள் கோரிக்கை

திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்வாயை சீரமைக்க நிதி

திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் பேசும் போது கூறியதாவது:-

காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணிகள் தாமதம் ஆவதால் பரம்பிக்குளத்தில் இருந்து தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது. இதனால் எந்த பயனும் இல்லை. கால்வாய் சீரமைக்கப்பட்டு இருந்தால் உபரிநீரை வறட்சி பாதித்த பகுதிகளுக்கு திறந்து விட்டு இருக்கலாம். எனவே காண்டூர் கால்வாய் பணிகளை கூடுதலாக தொழிலாளர்களை பணி அமர்த்தி விரைந்து முடிக்க வேண்டும். காண்டூர் கால்வாயில் நவமலை அருகே பனப்பள்ளம் என்கிற இடத்தில் கால்வாய் சேதமடைந்து உள்ளது. 40 ஆண்டு காலத்துக்கு சேதமடையாத வகையில் கால்வாயை கான்கீரிட் கொண்டு சீரமைக்க வேண்டும். பி.ஏ.பி. பிரதான கால்வாய்களும் மிகவும் மோசமான நிலையில் அழிந்து விடும் நிலையில் உள்ளது. எனவே பிரதான கால்வாய் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

நீர்பங்கீடு

கிளை கால்வாய்கள் சேதமடைந்து கிடப்பதால் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது. எனவே தண்ணீர் திறப்பதற்கு முன் 2-ம் மண்டல பாசன கால்வாய்களை சீரமைத்து, கடைமடை வரை தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கால்வாய் சீரமைப்பு பணிக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை பயன்படுத்த மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்றுக் கொடுக்க வேண்டும்.

காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளில் கடுமையான வறட்சி உள்ளது. வறட்சி பாதித்த பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும். மேலும் திறக்கப்படும் தண்ணீர் சரியாக வந்து சேருவதில்லை. எனவே நிர்ணயம் செய்யப்பட்ட அளவு தண்ணீர் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் நீர்பங்கீடு ஒரே மாதிரி இருக்க வேண்டும். பி.ஏ.பி. திட்டம் தெரிந்து கொள்ள பாசன சங்க தலைவர், உறுப்பினர்களை பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கு அழைத்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்