தீப திருவிழாவில் 12 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தீப திருவிழாவன்று 12 ஆயிரம் போலீசாரரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

Update: 2022-11-14 17:12 GMT

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தீப திருவிழாவன்று 12 ஆயிரம் போலீசாரரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 6-ந் தேதி மகா தீப திருவிழா நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய உள்ளனர். இதனால் திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கும். இன்று முழுவதும் பக்தர்கள் மலையை சுற்றி நடந்து கிரிவலம் செல்வார்கள். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம், காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தீபத் திருவிழா நடைபெறும் நாளில் பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் காவல்துறை சார்பில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீபத் திருவிழாவின் போது ஏராளமான போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

விடுதியில் சோதனை

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளதால் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் மலை ஏறும் பகுதியில் தமிழக சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அன்றைய தினம் பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

திருவண்ணாமலையில் உள்ள 110 தங்கும் விடுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தலைமையிலான போலீசார் தற்போதே சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் வெளிநாடு, வெளி மாவட்டத்தில் இருந்து சந்தேகப்படும் படியாக வரும் நபர்களை தங்க வைக்க கூடாது என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். இது தவிர முக்கிய கோவில்கள், தேர் பகுதிகள், பிரமுகர்கள் வீடுகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்