தூத்துக்குடி வீரர் உள்பட 29 பேருடன் மாயமான விமானம் - 7 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு; பிரத்யேக தகவல்கள்
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி காலை 8.30 மணிக்கு விமானம் புறப்பட்டது.
சென்னை,
ராணுவ விமானம்:
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேயர் நோக்கி கடந்த 2016ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி காலை 8.30 மணிக்கு விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானம் புறப்பட்டது.
29 பேர் பயணம்:
அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் 6 பேரும், விமானப்படை ஊழியர்கள் 11 பேரும், ராணுவ வீரர்கள் 2 பேரும், கடற்படை வீரர் ஒருவரும், கப்பல் மாலுமி ஒருவரும், கப்பல் படை ஊழியர்கள் 8 பேரும் என மொத்தம் 29 பேர் பயணித்தனர்.
பயணித்தோர் விவரம்:
விமானத்தை விமானிகள் பத்சாரா, நந்தா ஆகியோர் இயக்கி உள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டியாக விமானி குணால், விமான பொறியாளர் ராஜன் மற்றும் 2 விமான ஊழியர்கள் இருந்தனர். விமானப்படையை சேர்ந்த உயர் அதிகாரி தீபிகா, விமானப்படை வீரர் சஞ்சீவ்குமார் மற்றும் 9 பேர் இதில் பயணம் செய்துள்ளனர். ராணுவ என்ஜினீயரிங் சேவை பிரிவில் பணிபுரிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த விமல் மற்றும் ஒருவர் விமானத்தில் இருந்தனர்.
கப்பல் படை ஊழியர்கள்:
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் உள்ள பழுதான கப்பல்களை சரிசெய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கப்பல் படை ஊழியர்கள் சாம்பமூர்த்தி, பிரசாத் பாபு, நாகேந்திர ராவ், சேனாபதி, பூபேந்திர சிங், மகாரானா, சின்னாராவ், சீனிவாச ராவ் ஆகிய 8 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்த கடலோர பாதுகாப்பு படை வீரர்:
இந்த விமானத்தில் கடலோர பாதுகாப்புப்படை வீரர் முத்துகிருஷ்ணன் (வயது 37) என்பவரும் பயணித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் போர்ட்பிளேயர் நகரில் கடலோர பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார்.
விமானம் மாயம்:
விமானம் புறப்பட்ட 15 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரின் பார்வையில் இருந்தும் விமானம் மாயமானது. சென்னையில் இருந்து கிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே நடுவானில் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானம் திடீரென மாயமானது.
மாயமான விமானத்தின் முழு விவரம்:
* சென்னையில் இருந்து போர்ட்பிளேயருக்கு சென்ற போது மாயமான ஏ.என். 32 விமானம் ரஷியாவில் உள்ள அனடோவ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
* 1984 ம் ஆண்டில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.
* இரு என்ஜின்களை கொண்ட இந்த விமானத்தின் நீளம் 24 மீட்டர். உயரம் 8.75 மீட்டர். இறக்கையின் நீளம் 29.20 மீட்டர்.
* காலி விமானத்தின் எடை 16 ஆயிரம் 800 கிலோ
* விமானி உள்பட சிப்பந்திகள் 4 பேர் மற்றும் 42 பேர் பயணிக்கலாம்.
* அதிகபட்சமாக 6.7 டன் சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும்.
* அதிகபட்சமாக மணிக்கு 530 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும்.
* ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் தொடர்ந்து 4 மணி நேரம் பறக்கும்.
* மேலெழும்பி பறக்கவும், தரை இறங்கவும் குறைந்த தூர ஓடுதளமே போதுமானது.
* இந்த மாதத்தில் மூன்று முறை இந்த விமானத்தில் சிறிய அளவில் கோளாறு ஏற்பட்டு சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
* இந்திய விமானப்படையில் நூற்றுக்கும் அதிகமான ஏ.என்.332 ரக சரக்கு விமானங்கள் உள்ளன.
நாட்டின் மிகப்பெரிய அளவிலான தேடுதல் பணி:
மாயமான விமானத்தை கண்டுபிடிக்க அப்போதைய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டார். இதையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்திய விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. சென்னையில் இருந்து 145 நாட்டிக்கல் மைல் தொலைவில் விமானம் மாயமானதாக கூறப்பட்ட நிலையில் அப்பகுதியில் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்றன. தேடுதல் பணியில் அதிக அளவில் விமானங்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டநிலையில் நாட்டின் மிகப்பெரிய அளவிலான தேடுதல் பணியாக அது பார்க்கப்பட்டது.
தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட விமானங்கள், கப்பல்கள் விவரம் வருமாறு:
* இந்திய விமானப்படையின் மின்னொளி மற்றும் அகச்சிவப்பு உணரிகள் (சென்சார்கள்) பொருத்தப்பட்ட சி 130 ரக விமானங்கள்
* இந்திய கடற்படைக்குரிய, செயற்கை இடைக்கண் ரேடார்கள் பொருத்தப்பட்ட விமானம்
* டார்னியர் விமானங்கள்
* இந்திய கடற்படையின் 13 போர்க்கப்பல்கள்
* இந்திய கடலோர காவல்படை கப்பல்கள், வணிகக்கப்பல்கள்
* இந்திய கடலோர காவல்படையின் நீர்மூழ்கிக்கப்பல்
தேடுதல் முயற்சி தோல்வி:-
2016 ஜுலை 22ம் தேதி விமானம் மாயமான நிலையில் 2 மாதங்களாக தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. ஆனாலும், மாயமான விமானத்தின் நிலை என்ன என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்திவிட்டதாக 2016 செப்டம்பர் 15ம் தேதி இந்த விமானப்படை அறிவித்தது. மேலும், விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததுவிட்டதாக விமானப்படை அறிவித்தது.
7 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு...!
2016ம் ஆண்டு மாயமான ஏ.என்.32 ரக சரக்கு விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாயமான விமானம் 7 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகே கடலில் 310 கிலோமீட்டர் தொலைவில் 3.40 கிலோமீட்டர் ஆழத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோனார் கருவி மூலம் மாயமான விமானத்தின் பாகங்கள் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம்?
மாயமான விமானத்தில் பாகங்கள் 7 ஆண்டுகளுக்கு பின் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளபோதும் விமானம் கடலில் விழுந்தது எப்படி? விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.