கார் டிரைவருக்கு கொலை மிரட்டல்; மைத்துனர் கைது

சாத்தான்குளத்தில் கார் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-23 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் பிச்சைக்கண்ணன் (வயது 44). கார் டிரைவர். இவருக்கும், நெல்லை தாழையூத்து பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த குருசாமி மகள் ராமலட்சுமி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இதுதொடர்பாக ராதாபுரம் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் ராமலட்சுமியின் சகோதரர் ஆறுமுகராஜ் (32) என்பவர் கடந்த மாதம் 6-ந்தேதி பிச்சைக்கண்ணுவின் வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தனது சகோதரியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கொலை மிரட்டல் விடுத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிச்சைக்கண்ணு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து விசாரணை நடத்தி ஆறுமுகராஜை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்