உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மருத்துவமனையை மூட அதிரடி உத்தரவு

இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2024-05-08 10:36 GMT

சென்னை,

புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரான இவர், மார்க்கெட் கமிட்டி ஊழியராக உள்ளார். இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இரட்டையர்கள் ஆவர். இவர்களில் ஹேமராஜன், சித்தா பார்மசிஸ்ட் பணியில் உள்ளார். ஹேமசந்திரன், பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து விட்டு டிசைனிங் பணி செய்து வந்தார்.

ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். இதையடுத்து, அவருக்கு கடந்த ஏப்ரல்  25ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், அவரது குடும்பத்தினர் இதுபற்றி சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். 

அந்த விசாரணை குழுவினர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி, அறிக்கையை சமர்ப்பித்தனர். அந்த குழுவின் முதற்கட்ட விசாரணையில், மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்பதும் அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை என்றும் மருத்துவமனையில் டெக்னீசியன்கள், உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறுவை சிகிச்சைக்கு முன்பு பெற்றோர்களிடம் உரிய தகவலை தெரிவித்து கையெழுத்து பெறவில்லை என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அந்த தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் உரிய மருத்துவர்கள், சிகிச்சைக்கான கருவிகளை அமைக்க மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்