நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கால்வாயில் விழுந்த கர்ப்பிணி சாவு
மாடு குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கால்வாயில் விழுந்த கர்ப்பிணி தண்ணீரில் மூழ்கி இறந்தார். காயம் அடைந்த கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரமக்குடி,
மாடு குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கால்வாயில் விழுந்த கர்ப்பிணி தண்ணீரில் மூழ்கி இறந்தார். காயம் அடைந்த கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுமண தம்பதி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா பார்த்திபனூர் அருகே உள்ள கோனாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் பிரபாகரன் (வயது 27).
இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள எஸ்.அண்டக்குடி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் மகள் சூரிய பிரியதர்ஷினிக்கும் (23) திருமணம் நடந்தது. சூரியபிரியதர்ஷினி 4 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கணவன்-மனைவி, மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு அண்டக்குடி கிராமத்திற்கு சென்றுள்ளனர். பின்பு அங்கிருந்து சொந்த ஊரான கோனாகுளம் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
கால்வாய்க்குள் பாய்ந்தது
கீழப்பெருங்கரை கிராமம் அருகே வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. அருகில் உள்ள 15 அடி ஆழ கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் சூரியபிரியதர்ஷினி கால்வாய்க்குள் விழுந்தார். மோட்டார் சைக்கிள் அவர் மீது விழுந்தது. கால்வாயில் தண்ணீர் ஓடுவதால், நீந்த முடியாமல் தண்ணீருக்குள் மூழ்கி பிரியதர்ஷினி பரிதாபமாக இறந்தார். பிரபாகரன் காயம் அடைந்து மயங்கிய நிலையில் கரையில் கிடந்தார்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்துள்ளார். மனைவியையும் மோட்டார் சைக்கிளையும் காணவில்லை என அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் தெரிவித்தார்.
உடனே அனைவரும் கால்வாய்க்குள் இறங்கி தேடினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சூரிய பிரியதர்ஷினியை பிணமாக மீட்டனர்.
பிரபாகரன் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
விசாரணை
இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், பிரபாகரன்-சூரியபிரியதர்ஷினி மோட்டார் சைக்கிளில் சென்ற போது, மாடு குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கால்வாய்க்குள் பாய்ந்து விபத்து நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.