திருச்செங்கோட்டில் மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
திருச்செங்கோட்டில் மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
எலச்சிபாளையம்:
பள்ளிபாளையம் பாப்பம்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). மரம் வெட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று கார்த்திக் திருச்செங்கோட்டில் சங்ககிரி சாலையில் மாதேஸ்வரன் என்பவரது வீட்டின் முன்பு இருந்த வேப்ப மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டார். அவர் மரத்தின் மீது ஏறி அதை வெட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்திக் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.