பாலக்கோடு அருகே ரெயில் மோதி வாலிபர் பலி: போலீசார் விசாரணை

பாலக்கோடு அருகே ரெயில் மோதி பட்டதாரி வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-10-20 19:00 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் சக்திவேல் (வயது 21). பட்டதாரியான இவர் ஊரில் கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை சினிமாவுக்கு செல்வதாக தனது அத்தையிடம் கூறிவிட்டு சென்றார்.

அதன்பின்னர் இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் அவரை காணவில்லை. இந்த நிலையில் பாலக்கோடு அருகே முத்துநாயக்கன்பட்டி பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் சக்திவேல் பிணமாக கிடந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வழியாக வந்த ஒரு ரெயில் மோதி சக்திவேல் இறந்திருப்பது தெரியவந்தது. அவர் அந்த பகுதிக்கு எதற்கு சென்றார்? தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்த போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்