வெவ்வேறு இடங்களில்ரெயிலில் அடிபட்டு 4 பேர் சாவு

சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு 4 பேர் இறந்தனர்.

Update: 2023-10-13 20:52 GMT

சூரமங்கலம்

வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு 4 பேர் பலியானார்கள்.

தண்டவாளத்தில் பிணம்

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட லோகூர்- டேனிஷ்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க நபர் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவரது சட்டை பையில் காட்பாடியில் இருந்து கோழிக்கோடு வரை செல்வதற்கான ரெயில் டிக்கெட் இருந்தது. இறந்தவர் ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே மதன்பள்ளியை சேர்ந்த முகமதுஷபி (வயது 38) என்பது தெரியவந்தது. அவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கோழிக்கோடு என்பதும், ஆந்திராவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்ததும் தெரிய வந்தது.

கட்டிட தொழிலாளி

இதேபோல் நேற்றிரவு முன்தினம் மின்னாம்பள்ளி ரெயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் சுமார் 35 வயது நபர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சேலம் ரெயில்வே விரைந்து வந்து அந்த உடலை மீட்டு விசாரித்தனர்.

விசாரணையில், இறந்தவர் பெத்தநாயக்கன்பாளையம் அருகே சின்னமசமுத்திரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (36) என்பது தெரியவந்தது. இவர், சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கட்டிட வேலை பார்த்து விட்டு சேலம்- விருத்தாசலம் ரெயிலில் ஊருக்கு சென்ற போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

காதல் திருமணம்

சேலம் பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட் அருகில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், இறந்தவர் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த பெயிண்டர் தியாகராஜன் (வயது 34) என்பதும், காதல் திருமணம் செய்த அவர், மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்த போது ரெயில் மோதி அவர் இறந்தது விசாரணையில் தெரிய வந்தது.

சேலம் மேக்னசைட்- கருப்பூர் ரெயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

சேலத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்