கிருஷ்ணகிரி அருகேமோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலிஉறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு

Update: 2023-08-03 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவன் பலியானான். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுவன்

கிருஷ்ணகிரி அருகே உள்ள பாஞ்சாலியூரை சேர்ந்தவர் ரகமத். இவருடைய மகன் சிபான் (வயது 16). இவர் கடந்த 29-ந் தேதி தனது வீட்டின் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மது போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஸ்ரீதரன் என்பவர் கட்டுப்பாட்டை இழந்து சிபான் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த சிபானை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிபான் நேற்று முன்தினம் இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் உறவினர்கள் மது போதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஸ்ரீதரனை கைது செய்ய வலியுறுத்தி பாஞ்சாலியூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் சமரசம்

இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைய செய்தனர். தொடர்ந்து சிறுவனின் உறவினர்கள் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்