சென்னிமலை அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
சென்னிமலை அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னிமலை
சென்னிமலை அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செத்து மிதக்கும் மீன்கள்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் ஊராட்சிக்குட்பட்ட செங்குளம் பகுதியில் சுமார் 4½ ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்ததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செங்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜிலேபி ரகத்தை சேர்ந்த சுமார் 1,200 மீன் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விட்டிருந்தனர்.
இந்த மீன் குஞ்சுகள் வளர்ச்சி அடைந்து நாளடைவில் ஆயிரக்கணக்கில் இனப்பெருக்கம் செய்திருந்தது. இந்த நிலையில் போதுமான மழை இல்லாததால் செங்குளம் குளத்தில் நாளுக்கு நாள் தண்ணீர் குறைந்து கொண்டே வந்தது. தற்போது தண்ணீர் வெகுவாக குறைந்ததால் மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மழை பெய்யவில்லை
இதுகுறித்து செங்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், '3 மாதங்களுக்கு முன்பு இந்த குளத்தில் தண்ணீர் இருந்ததால் மீன் குஞ்சுகளை வாங்கி விட்டிருந்தோம். அந்த மீன் குஞ்சுகள் இனப்பெருக்கம் செய்ததுடன் ¼ கிலோ எடை அளவுக்கு வளர்ந்திருந்தது. ஆனால் போதுமான மழை பெய்யாததாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் மீன்கள் செத்து மிதக்கின்றன' என்றனர்.