தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி மனு

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2024-09-25 20:26 GMT

கோப்புப்படம் 

சென்னை,

மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என குற்றம்சாட்டிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் தயாநிதிமாறன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

நேற்று இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேகானந்தன், "தயாநிதி மாறன் இந்த வழக்கில் நேரில் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த அவதூறு வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விடுவிக்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதற்கு தயாநிதி மாறன் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், "இந்த வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விடுவிக்கக்கோரும் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த மனுவை வழக்கு விசாரணைக்கு பட்டியலிடக் கூடாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார். அதே சமயம் அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான வாதங்கள் நிறைவடைந்தது.

இதனையடுத்து வரும் அக்டோபர் 16-ம் தேதி இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். அதேவேளையில், அடுத்தடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக விலக்கு கோரிய எடப்பாடி பழனிசாமி மனு மீதான வாதம் முடிவடைந்த நிலையில் இந்த மனு மீது அக்டோபர் 16-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்