நெல்லை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில், ஏராளமானவர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

Update: 2023-08-16 19:41 GMT

ஆடி அமாவாசையையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில், ஏராளமானவர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தர்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி நேற்று நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகிலும், குட்டத்துறை இசக்கியம்மன் கோவில் அருகிலும், வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில், கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் அருகிலும் ஏராளமானவர்கள் நேற்று தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஏராளமான புரோகிதர்கள் ஆற்றங்கரையோரம் அமர்ந்து இருந்து தர்ப்பணம் செய்து வைத்தனர்.

நெல்லை அருகன்குளம் ஜடாயூ தீர்த்தத்தின் அருகில் உள்ள ஜடாயூத்துறையில் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து அருகில் உள்ள லட்சுமி நாராயணர் கோவில், ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ஜடாயு தீர்த்தம் லட்சுமி நாராயணர் கோவில், நெல்லை சந்திப்பு சாலைகுமாரசாமி கோவில் முன்பும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பாபநாசம்

இதேபோல் பாபநாசம் கோவில் முன்பு தாமிரபரணி நதியில் பக்தர்கள் புனித நீராடி அங்குள்ள படித்துறையில் வைத்து தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து பாபநாசம் உலாகாம்பிகை சமேத பாபவிநாசர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அம்பை தாமிரபரணியில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து தர்ப்பணம் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்