சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
நாகூரில் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்துத்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகூர்:
நாகூரில் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்துத்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த மின்கம்பம்
நாகை மாவட்டம் நாகூரில் சிவன் வடக்கு வீதி உள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியானது தேரடி தெருவில் இருந்து சிவன் மேலவீதிக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக இருந்து வருகிறது. அதனால் இந்த தெருவில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும்.
இந்தநிலையில் சிவன் வடக்கு வீதி சாலையோரத்தில் உள்ள மின் கம்பம் ஒன்று சேதமடைந்து உள்ளது. அதாவது அந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு கரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த மின்கம்பமானது அதன் உறுதி தன்மையை இழந்து காணப்படுகிறது.
அச்சத்தில் அப்பகுதி மக்கள்
மேலும் அந்த மின் கம்பத்தில் முழுவதிலும் வெடிப்புகள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த சாலையில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை சென்று வருவதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதி மக்களின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைத்துதர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிதாக அமைத்துத்தர வேண்டும்
இது குறித்து நாகூரை சேர்ந்த தனபால் கூறுகையில், நாகூர் சிவன் வடக்கு வீதியில் உள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. இந்த சேதமடைந்த மின்கம்பத்தில் உயிர்சேதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இதுகுறித்து சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த சேதமடைந்த மின்கம்பம் வீடுகளுக்கு அருகில் இருப்பதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக இந்த சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.