மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்தது

Update: 2022-07-04 21:28 GMT


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்தது.

தொடர் மழை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக குளிர்ந்த காற்றுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர் மழை பெய்வதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றான பாபநாசம் அணையில் நேற்று முன்தினம் நீர்மட்டம் 50.70 அடியாக இருந்தது. அணையில் ஒரே நாளில் 2 அடிக்கும் அதிகமாக நீர்மட்டம் உயர்ந்து நேற்று 52.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,882 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 704 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

சேர்வலாறு அணை 7 அடி உயர்வு

இதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 64.47 அடியாக இருந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் சுமார் 7 அடி உயர்ந்து நேற்று 71.19 அடியாக உள்ளது.

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 76.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 79 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவிக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

மழை அளவு விவரம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம் அணை-5, சேர்வலாறு-7, அடவிநயினார் அணை-16, தென்காசி-4.

Tags:    

மேலும் செய்திகள்