நல்லாறு-ஆனைமலையாறு அணைத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்

பி.ஏ.பி. திட்டத்தில் தண்ணீரை சேமிக்கும் வகையில், நல்லாறு-ஆனைமலையாறு அணைத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.

Update: 2022-08-27 18:28 GMT

பி.ஏ.பி. திட்டத்தில் தண்ணீரை சேமிக்கும் வகையில், நல்லாறு-ஆனைமலையாறு அணைத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.

நல்லாறு-ஆனைமலையாறு அணைத்திட்டம்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்றுகாலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக அளித்து முறையிட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.) நல்லாறு-ஆனைமலையாறு அணைத்திட்டங்களால் 10 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து விவசாய பாசன திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். இதனால் பி.ஏ.பி. நீர்பற்றாக்குறையை போக்கி விவசாயிகளை பாதுகாக்க முடியும். தமிழக அரசு விரைந்து இந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். நீர் பற்றாக்குறையுள்ள பி.ஏ.பி. திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். அவினாசி-அத்திக்கடவு திட்டத்தில் 10 ஒன்றியங்களில் உள்ள குளம், குட்டைகளை இணைக்க ஒரு துணை திட்டம் உருவாக்க வேண்டும்.

சின்னவெங்காயம் விலைவீழ்ச்சி

சின்னவெங்காய விலை வீழ்ச்சியில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காயம் சாகுபடி செய்து நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும், கட்டுப்படியான விலையும் நிர்ணயம் செய்ய வேண்டும். பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டர் ரூ.42-ம், எருமை பாலுக்கு லிட்டர் ரூ.51-ம் உயர்த்தி அரசு வழங்க வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.140-ம், உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50-ம் விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

திருப்பூர், அவினாசி, சேவூர் பகுதிகளில் தனியாரிடம் பருத்தி விதை வாங்கி பயிரிட்டனர். விளைச்சலின்போது பருத்தி பிஞ்சு நிற்காமல் உதிர்ந்து விடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

பயிர்க்கடன்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் அளித்த மனுவில், 'ஊத்துக்குளி தாலுகா மொரட்டுப்பாளையம் வெள்ளியம்பாளையத்தில் சட்டவிரோத கல்குவாரிகளை இயக்க துணை போகும் திருப்பூர் மாவட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து பேசியதாவது:-

மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் இரவு 7 மணி வரை வகுப்புகள் நடக்கிறது. அரசு விடுமுறை நாட்களிலும் வகுப்புகள் நடக்கிறது. அரசு விதிகளின்படி பள்ளிகளை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.ஏ.பி. திட்டத்தில் ஆழியாற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு குடிநீர் எடுத்துச்செல்லும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் முறை இருந்து வந்தது. தற்போது 6 மாதம், 9 மாதம் என பயிர்களை முறைவைத்து பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பயிர்க்கடனை திருப்பி செலுத்துவதில் சிரமம் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை பயிர்க்கடன் புதுப்பிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்