சாராயம் காய்ச்சிய நபர்கள் திருந்தி வாழ கறவை மாடுகள்
சாராயம் காய்ச்சிய நபர்கள் திருந்தி வாழ்வதற்காக, அவர்களுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கறவை மாடுகள் வழங்கினார்.;
வேலூர்
சாராயம் காய்ச்சிய நபர்கள் திருந்தி வாழ்வதற்காக, அவர்களுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கறவை மாடுகள் வழங்கினார்.
கறவை மாடுகள்
சாரயம் காய்ச்சும் நபர்களை நல்வழிப்படுத்தி புதுவாழ்வு கொடுப்பதற்காக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மனம் திருந்தியோருக்கான மறுவாழ்வு நிதியில் இருந்து இலவச கறவை மாடு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாராயம் காய்ச்சிய 380 நபர்களை நல்வழிப்படுத்துவதற்கு இலவசமாக கறவை மாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று 10 நபர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூரில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
366 பயனாளிகள்
வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு ஒன்றியத்தில் 215 பயனாளிகள், வேலூர் ஒன்றியத்தில் 122 பயனாளிகள், கணியம்பாடி ஒன்றியத்தில் 42 பயனாளிகள், அணைக்கட்டு ஒன்றியத்தில் 1 பயனாளி என 380 பயனாளிகளில் இறந்த 14 பேர் போக மீதம் உள்ள 366 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு பசுவின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். 10 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் சாராயம் காய்ச்சும் நபர்கள் திருந்தி வாழ்வதற்கான வழிமுறையை அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. சாராயம் காய்ச்சிய நபர்கள் இனிவரும் நாட்களில் சாராயம் காய்ச்சாமல் மாடுகளை வைத்து தொழில் செய்வோம் என்ற உறுதிமொழியுடன் மாடுகளை பெற்றுக்கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் நவநீத கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.