'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-11-06 23:28 GMT

ரோட்டை சீரமைக்க வேண்டும்

ஈரோடு மாநகராட்சி 24-வது வார்டு கிருஷ்ணம்பாளையம் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பின்புறம் உள்ள ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் தட்டுத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். மேலும் அந்த வழியாக வயதானவர்கள், சிறுவர், சிறுமிகளும் தடுமாறி கீழே விழுகிறார்கள். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சதீஸ் கமல், கிருஷ்ணம்பாளையம் காலனி.

தேங்கும் கழிவுநீர்

அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம் ஜி.எஸ்.காலனியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி முழுமை அடையவில்லை. இதன்காரணமாக சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பணியை முழுமையாக முடிப்பதுடன், கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மைக்கேல்பாளையம்.

குப்பை அகற்றப்படுமா?

அந்தியூர் அரசு மருத்துவமனை அருகில் புதுக்காடு செல்லும் சாலையில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது குப்பை தூசிகள் விழுகின்றன. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூபதி, அந்தியூர்.

வீணாகும் குடிநீர்

ஈரோடு நசியனூர் ரோடு நாராயணவலசில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் இந்த ரோட்டில் ஆறு போல் தண்ணீர் ஓடுகிறது. இதன்காரணமாக இந்த ரோட்டில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியவில்லை. மேலும் அந்தப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரி செய்யவேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

பழுதடைந்த மின் கம்பம்

சத்தியமங்கலம் அருகே இக்கரைநெகமம் புதூரில் சாலையோரத்தில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம் பழுதடைந்து அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து எலும்புக்கூடு போன்று காட்சி அளிக்கிறது. வேகமாக காற்று வீசினால் அந்த மின் கம்பம் உடைந்து விழுந்து மின் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், இக்கரைநெகமம் புதூர்.

நாய்த்தொல்லை

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் ரோட்டில் வருவோர், போவோரை துரத்துகின்றன. மேலும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டு ரோட்டின் குறுக்கே ஓடுகின்றன. நாய்த்தொல்லையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக நாய்கள் குறுக்கே ஓடுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து செல்கிறார்கள். எனவே நாய்த்தொல்லைக்கு தீர்வு காண அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்தார், பி.பி.அக்ரஹாரம்.

பழுதடைந்த கேமரா

விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வாய்ப்பாடி ஆர்.எஸ். செல்லும் ரோடு சந்திப்பில் போலீஸ் துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. வாகனம் மோதியதில் இந்த கண்காணிப்பு கேமரா பழுதடைந்து பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படாமல் ரோட்டின் ஓரமாக வைக்கப்பட்டு உள்ளது. எனவே கண்காணிப்பு கேமராவை சரி செய்து மீண்டும் அதே இடத்தில் பொருத்தி குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சவுந்தரராஜன், விஜயமங்கலம்.

Tags:    

மேலும் செய்திகள்