தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 9962818888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஓடை தூர்வாரப்படுமா?
கோத்தகிரி தாலுகா அரவேனு அருகே பங்களாடாவில் இருந்து கல்லாடா வழியாக நீரோடை ஒன்று செல்கிறது. இந்த ஓடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து, மண் மூடி உள்ளது. இதனால் ஓடை சுருங்கி, நீரோட்டம் தடைப்பட்டு இருக்கிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மழைக்காலத்தில் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் காணப்படுகிறது. எனவே சீராக தண்ணீர் ஓடும் வகையில் ஓடையை ஆக்கிரமித்துள்ள செடிகளை வெட்டி அகற்றி, ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், அரவேனு.
காற்றில் பறக்கும் குப்பைகள்
கோவை கணபதி கணேஷ் லே அவுட் வழியாக மணியகாரம்பாளையம், நல்லாம்பாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் எங்கு பார்த்தாலும் இருபுறமும் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும்போது குப்பைகள் காற்றில் பறந்து இருசக்கர வாகன ஓட்டிகளின் முகத்தில் விழுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அந்த வழியாக சென்று வரும் பாதசாரிகளும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து, குப்பைகளை உடனுக்குடன் அகற்ற ஆவன செய்ய வேண்டும்.
சித்ரா, கணபதி.
பகலில் ஒளிரும் தெருவிளக்கு
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி தொட்டதாசனூர் கிராமத்தில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டு உள்ள தெருவிளக்கு பகலிலும் ஒளிர்கிறது. அங்கு பகலில் தானாக அணைந்துவிடும் வகையிலும், இரவில் தானாக ஒளிரும் வகையிலும் எந்திரம் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த முறை பின்பற்றப்படவில்லை. இதன் காரணமாக பகலிலும் தெருவிளக்கு ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் அரசுக்கு மின்சார இழப்பு ஏற்படுகிறது. எனவே பகலில் மின்விளக்குகள் ஒளிராமல் நடவடிக்கை எடுக்க மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
சவுந்தர், தொட்டதாசனூர்.
சுகாதார சீர்கேடு
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் எதிர்புறம் குப்பைகள் குவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் கவர்களில் கொண்டு வந்து கோழிக்கழிவுகள் கொட்டப்படுகிறது இது தவிர அருகில் உள்ள வணிக வளாகங்களில் இருந்தும், குப்பைகள் வீசி எறியப்படுகிறது. இதனால் அந்த பகுதியே சுகாதார சீர்கேட்டில் தவிக்கிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் கால்நடைகள் அந்த குப்பையை சிதறடித்துவிடுவதால், அந்த இடமே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூவரசன், ஆனைமலை.
நோய் பரவும் அபாயம்
கோவை கோவைப்புதூர் போலீஸ் ஹவுசிங் யூனிட் பின்புறம் உள்ள சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கழிவுநீரை பீய்ச்சியடித்து செல்கின்றன. இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியவில்லை. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை உடனடியாக அகற்றுவதோடு கொசு மருந்து அடிக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.
வடிவேல் சுப்பிரமணியன், கோவைப்புதூர்.
குடிநீர் தட்டுப்பாடு
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் வீட்டுக்கு ஒரு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த குழாயில் இதுவரை குடிநீர் வரவில்லை. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீருக்காக காத்து கிடக்கும் நிலை உள்ளது. எனவே அங்கு ஏற்பட்டு உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும்.
பாஸ்கர், குன்னூர்.
போக்குவரத்து நெரிசல்
கோவை திருச்சி சாலை கதிர்மில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. சில நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே அங்கு போக்குவரத்து போலீசாரை நிரந்தரமாக பணியில் அமர்த்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாண்டுரங்கன், காமாட்சிபுரம்.
குழி மூடப்படுமா?
கோவை பாலசுந்தரம் சாலையில் வடக்கு தாசில்தார் அலுவலகம் எதிரே பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த குழியை சரிவர மூடவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் வாகனங்கள் பழுதாகி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அங்குள்ள குழியை சரியாக மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.
ராஜா, கோவை.
புழுதி பறக்கும் சாலை
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீரமைப்பு பணிக்காக பழைய சாலை பெயர்க்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் சாலை சீரமைப்பு பணி முடியவில்ைல. இதனால் அந்த பகுதியில் தூசிகள், புழுதிகள் பறக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கும அபாயம் உள்ளது. இது தவிர அந்த சாலையால் வாகனங்கள் பழுதடைந்து நடுவழியில் நிற்கின்றன. எனவே சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வி, கோவை.
வாகன ஓட்டிகள் பாதிப்பு
கோவை மாநகர பகுதியில் போலீசாருக்கு ரோந்து செல்ல புதிய வாகனம் வழங்கப்பட்டு உள்ளது. அதில் ரோந்து செல்லும் போலீசார், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில், சாலையின் நடுவே வாகனங்களை நிறுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக பிற வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அதை தவிர்க்க போலீசார் முன்வர வேண்டும்.
சித்து, கோவை.