'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-12 16:47 GMT

வீதி சீரமைக்கப்படுமா? 

ஒலகடம் பேரூராட்சிக்கு உள்பட்ட வெடிக்காரன்பாளையம் கிராமத்தில் அரசு பள்ளிக்கூடத்தில் 160-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்துக்கு செல்லும் மேற்கு வீதி மிகவும் பள்ளமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழையால் இங்குள்ள வீதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. வீதியில் தேங்கி உள்ள மழைநீரில் நடந்துதான் மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. அவ்வாறு செல்லும் போது தேங்கி கிடக்கும் மழைநீரின் மூலம் சரும வியாதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் நீரால் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இன்று பள்ளிக்கூடம் திறக்கப்பட உள்ளதால் மாணவ- மாணவிகளின் நலன் கருதி வீதியில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றுவதுடன், வீதியை சமதளமாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திக், வெடிக்காரன்பாளையம்.

போக்குவரத்துக்கு இடையூறு

அந்தியூர் பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தனித்தனியாக வழிகள் உள்ளன. இந்த வழிகளில் கார் மற்றும் சரக்கு வாகனங்களை அதன் ஓட்டுனர்கள் நிறுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் வாகனங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருள், புதுப்பாளையம்.

தடுப்பு சுவர் வேண்டும்

சென்னசமுத்திரம் பேரூராட்சி 1-வது வார்டுக்கு உள்பட்ட கொல்லம்புதுப்பாளையத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம் உள்ள சாலையில் வளைவான பகுதி அமைந்துள்ளது. ஆனால் இந்த வளைவில் தடுப்பு சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வளைவில் திரும்பும்போது விபத்தில் சிக்குகிறார்கள். எனவே அந்த வளைவில் தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கொல்லம்புதுப்பாளையம்.

ஆற்றில் கழிவுநீர் கலப்பு

தளவாய்ப்பேட்டையில் உள்ள பவானி ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் ஆற்றில் உள்ள மீன்கள் மயங்கியபடி மிதக்கின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் ஆற்றில் குளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே பவானி ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தளவாய்ப்பேட்டை.

ஆபத்தான மின் கம்பம்

காலிங்கராயன்பாளையத்தை அடுத்த மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி அலுவலகம் எதிரில் உள்ள பாரதி நகருக்கு நுழையும் பகுதியில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மின் கம்பம் விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், அதை மாற்ற மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பாரதி நகர்.

போக்குவரத்து நெரிசல்

ஈரோடு வாசுகி, அகில்மேடு வீதிகள் வழியாக ஈரோடு பஸ் நிலையத்துக்கு அரசு, தனியார் பஸ்கள் செல்கின்றன. அந்த வீதிகளில் இருபுறமும் இருசக்கர வாகனங்களும், கார்களும் நிறுத்தி வைக்கப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு ஒருபுறம் மட்டும் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்து பஸ்கள் செல்வதற்கு எளிதாக அமையும்.

பவித்ரா, ஈரோடு.

பஸ் நிறுத்தம்

ஈரோடு ரெயில் நிலையம் முன்பு டவுன் பஸ்கள் நிறுத்தம் உள்ளது. அங்கு பஸ் நிலையத்துக்கு செல்லும் டவுன் பஸ்களும், மினி பஸ்களும் நிறுத்தப்படுகிறது. அதேசமயம் ஈரோட்டில் இருந்து வெள்ளோடு, சென்னிமலைக்கு செல்லும் டவுன் பஸ்கள் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்துக்கு உள்ளே வராமல், சென்னிமலை ரோட்டிலேயே நின்று செல்கிறது. இதனால் பயணிகள் நிழற்குடையில் நிற்க முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சென்னிமலைக்கு செல்லும் டவுன் பஸ்களும் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்துக்குள் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரியா, ஈரோடு.

Tags:    

மேலும் செய்திகள்