'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-01 20:37 GMT

குண்டும்-குழியுமான சாலை 

ஈரோடு சத்திரோட்டில் இருந்து பெரியவலசு செல்லும் முனியப்பசாமி கோவில் வீதி குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் இந்த ரோட்டில் அடிக்கடி விபத்து நடக்கிறது. மேலும் மழை பெய்யும்போது சாலை குளம் போல் காட்சி அளிக்கிறது. எனவே குண்டும்-குழியுமான சாலையை உடனே சரிசெய்ய வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

மின்விளக்கு வேண்டும்

ஈரோடு-கரூர் ரோட்டில் கொளாநல்லியை அடுத்த கருங்கரடு கிராமத்தில் இருந்து காரணாம்பாளையம் வரை ரோட்டில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு 7 மணிக்கு மேல் அந்த வழியாக கடுமையான இருள் சூழ்ந்துவிடுகிறது. மேலும் அந்த பகுதியில் இருபுறமும் தோட்டங்களாக இருப்பதால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு வெளிச்சம் முக்கியம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கருங்கரடில் இருந்து காரணாம்பாளையம் வரை மின்விளக்கு வசதி செய்து தரவேண்டும்.

பொதுமக்கள், காரணாம்பாளையம்.

குடியிருப்புகளுக்குள் மழைநீர்

அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சி அட்டவணைப்புதூரில் குருவரெட்டியூர் ரோட்டோரம் உள்ள ஏ.டி. காலனியில். சுமார் 75 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். மழை பெய்தால் இந்த குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் வீடுகளுக்கு முன் தண்ணீர் தேங்கி நின்றால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழ்நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அட்டவணைப்புதூர் ஏ.டி. காலனியில் மழை நீர் தேங்காதவாறு ஆவன செய்ய வேண்டும்.

பொதுமக்கள், அட்டவணைப்புதூர்.

ஆபத்தான பள்ளம் 

ஈரோடு நாடார்மேடு பெரியார் வீதியில் உள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக நடந்து செல்பவர்கள் தடுமாறி விழுந்து விடாமல் இருக்க எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதில் செடியின் தொட்டியையும், செங்கற்களையும் பொதுமக்கள் வைத்து உள்ளனர். எனவே பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்து, நாடார்மேடு.

குடிநீர் குழாயில் உடைப்பு

ஈரோடு நசியனூர் ரோடு நாராயணவலசு செல்லும் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் தண்ணீர் வீணாக ரோட்டில் ஆறு போல் செல்கிறது. இதன்காரணமாக அந்தப்பகுதி சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்தப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிநீர் குழாயை சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் உடனே சரிசெய்ய வேண்டும்.

பொதுமக்கள், நாராயணவலசு, ஈரோடு.

மழையால் பழுதான சாலை

பவானி அருகே தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட புதுக்காடையாம்பட்டியில் பிள்ளையார் கோவில் வீதியில் கடந்த ஆண்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து வெளியே தெரிகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சாலையை நேரில் பார்த்து உடனே சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், புதுக்காடையாம்பட்டி

Tags:    

மேலும் செய்திகள்