'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update:2022-07-23 21:17 IST

குண்டும், குழியுமான தெரு 

திண்டுக்கல் மாநகராட்சி 10-வது வார்டு பெரிய அய்யன்குளம் பகுதியில் தெரு சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. தெருவில் விளையாடும் குழந்தைகள், முதியவர்கள் தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே தெருவில் சாலை அமைத்து தரவேண்டும். -தியாகு, பெரியஅய்யன்குளம்.

ஆற்று பாலத்தில் விரிசல்

திண்டுக்கல் அருகே பெரியகோட்டை கிராமத்துக்கு உட்பட்ட கோம்பையன்பட்டி ஆற்று பாலத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. அந்த விரிசல் அதிகமாகி பாலத்துக்கு ஆபத்தாகும் முன்பு சரிசெய்ய வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -லிங்கம், கஸ்தூரிநாயக்கன்பட்டி.

சேதம் அடைந்த சமுதாயக்கூடம் 

நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு ஊராட்சி முத்தலாபுரம் கிழக்கு தெரு பகுதியில் சமுதாயக்கூடம் உள்ளது. அதை முறையாக பராமரிக்காததால் சமுதாயக்கூடம் சேதம் அடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சமுதாயக்கூடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -அய்யர்பாண்டி, விளாம்பட்டி.

வயரில் தொங்கும் தெருவிளக்கு

பழனி அருகே கீரனூர் பேரூராட்சி 1-வது வார்டு செல்வவிநாயகர் கோவில் தெருவில் ஒரு மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கு வயரின் பிடியில் தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் காற்று வீசும் போது தெருவிளக்கு அசைவதால் கம்பத்தில் மோதி உடையும் வாய்ப்பு உள்ளது. அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். -பொதுமக்கள், கீரனூர்.

தெருவில் தேங்கும் கழிவுநீர் 

பழனி அருகே பாப்பம்பட்டி ஊராட்சி குப்பம்பாளையம் கிழக்கு தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாருவதோடு, கால்வாயை அகலமாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், குப்பம்பாளையம்.

சேதம் அடைந்த சாலை 

தேனி-கம்பம் சாலையில் போடி விலக்கு அருகே தனியார் மில் முன்பு சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். விபத்தை தடுக்க சாலையை சீரமைக்க வேண்டும். -ராமமூர்த்தி, தேனி.

பயன்படாத தண்ணீர் தொட்டி 

தேனி தபால் நிலைய ஓடைத்தெரு திட்டசாலையில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லை. அதை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். இதற்கு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சகாயராஜ், தேனி.

மின்கம்பத்தை மாற்ற வேண்டும் 

திண்டுக்கல் நாகல்புதூரில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம்அடைந்து விட்டது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. அந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நட வேண்டும். -ராஜா, திண்டுக்கல்.

வீணாகும் குடிநீர்

தேனி கே.ஆர்.ஆர்.நகரில் குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. இதில் நீரேற்றும் போது தொட்டி நிரம்பியதும் நிறுத்துவது இல்லை. இதனால் தொட்டி நிரம்பி அடிக்கடி குடிநீர் வீணாக தெருவில் செல்கிறது. யாருக்கும் பயன்படாமல் தெருவில் குடிநீர் வீணாக செல்வதை தடுக்க வேண்டும். -பொதுமக்கள், தேனி.

--------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

Tags:    

மேலும் செய்திகள்