'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-22 16:47 GMT

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சி சுகாதார வளாகம் உள்ளது. இங்கு இயற்கை உபாதை கழிக்க ரூ.1 மற்றும் ரூ.2 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ரூ.5 வசூலிக்கிறார்கள். இதுகுறித்து அங்குள்ளவர்களிடம் கேட்டால், அதிகாரிகள் வசூலிக்க சொல்வதாக கூறுகிறார்கள். இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, முறையாக கட்டணம் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

- சுப்பிரமணியன், சென்னை.

சாலை சீரமைக்கப்படுமா?

ராதாபுரம் பஞ்சாயத்து பாப்பான்குளம் ஊருக்குள் செல்லும் மெயின் ரோடு மிகவும் சேதம் அடைந்துள்ளது. தார் சாலை என்பதற்கான அடையாளமே இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம். 

மோட்டார் பழுது சரிசெய்யப்படுமா? 

முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சியில் ஊருணி அருகில் குடிநீர் தொட்டி உள்ளது. ஆனால், அதனுடன் கூடிய மோட்டார் பழுது அடைந்ததால் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை உள்ளது. அந்த மோட்டார் பழுதை சரிசெய்து தொட்டியில் தண்ணீர் ஏற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- சண்முகம், சிந்தாமணி.

ஊர் பெயர் பலகை வேண்டும்

திசையன்விளை தாலுகா இட்டமொழி ஊராட்சி விஜயஅச்சம்பாடு கிராமத்தில் ஊர் பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் ஊர் எதுவென்று தெரியாமல் சிரமப்படுகின்றனர். ஆகையால் ஊர் பெயர் பலகை வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

- நல்லவேல்ராஜா, விஜயஅச்சம்பாடு.

ஒளிராத தெருவிளக்குகள்

திசையன்விளை தாலுகா கரைச்சுத்துபுதூர் பஞ்சாயத்து சூடுஉயர்ந்தான்விளை மேற்கு பகுதியில் இருந்து தோப்புவிளைக்கு செல்லும் சாலையில் 6 தெருவிளக்குகள் உள்ளன. அவை சுமார் 3 மாத காலமாக ஒளிராமல் உள்ளன. இதனால் அந்த சாலையில் செல்லும் பெண்கள், குழந்தைகள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி தெருவிளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.

- அரிகிருஷ்ணன், சூடுஉயர்ந்தான்விளை.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அரசு மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு இன்றி சுகாதாரம் இல்லாத நிலையில் இருப்பதாகவும், இதனால் நோயாளிகள் சிரமப்படுவதாகவும், ஆய்க்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக தற்போது கழிவறை கதவுகள் சரிசெய்யப்பட்டு, சுத்தமாக காட்சி அளிக்கிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

ஆபத்தான கிணறு 

கடையநல்லூர் தாலுகா சேர்ந்தமரம் கிராமத்தில் போலீஸ் நிலையம் பின்புறம் சாலையோரம் திறந்த நிலையில் கிணறு உள்ளது. மேலும் தடுப்பு சுவரும் இல்லை. இதனால் அந்த வழியாக சைக்கிளில் பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது. ஆகையால் ஆபத்தான அந்த கிணற்றை மூடவோ அல்லது தடுப்பு சுவர் அமைக்கவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- மணிகண்டன், சேர்ந்தமரம்.

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசியில் இருந்து அம்பை செல்லும் நெடுஞ்சாலையில் மத்தளம்பாறையில் ஆபத்தான வளைவு உள்ளதாகவும், அந்த பகுதியில் ஆபத்தான பள்ளங்கள் இருப்பதால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாகவும், கடையத்தை சேர்ந்த வாசகர் திருக்குமரன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு நேற்று முன்தினம் செய்தியாக பிரசுரமானது. இதையடுத்து அந்த பள்ளங்களை ஜல்லிக்கற்கள் மற்றும் தார் கொண்டு அதிகாரிகள் சரிசெய்து உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?

கடையம் யூனியன் சேர்வைக்காரன்பட்டி ஊராட்சியில் செக்கடியூர், புறகாட்டாபுலியூர், அம்பேத்கர்நகர் உள்ளது. இந்த பகுதி மக்கள் சுடுகாட்டுக்கு செல்ல சரிவர சாலை வசதி இல்லை. சுடுகாட்டில் உள்ள அடிபம்பில் தண்ணீர் வருவது இல்லை. மின்விளக்கு வசதி இல்லை. அங்குள்ள மண்டபமும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, இந்த அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

- முத்துராஜா, செக்கடியூர்.

சாலையின் நடுவே மின்கம்பம்

ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிகுளம் மேலத்தெருவில் மின்கம்பம் சாலையின் நடுவில் உள்ளது. மேலும், சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் விழக்கூடிய நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

- சாம்குமார், செட்டிகுளம்.

Tags:    

மேலும் செய்திகள்