தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு வாசகர்கள் அனுப்பிய புகார்கள் விவரம்.
அடையாள குறியீடு வரையப்பட்டது
நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பில் இருந்து கற்கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கற்கோவிலின் பின்பகுதியில் விளையாட்டு திடலின் அருகில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் அடையாள குறியீடு வரையப்படாமல் இருந்தது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் அடையாள குறியீடு வரைந்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
குளம் தூர்வாரப்படுமா?
மருங்கூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராமனாதிச்சன்புதூர்-அமராவதிவிளை ஊர்களுக்கு இடையே பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது, குளம் முழுவதும் ஆகாயத்தாமரைகள் மற்றும் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே, குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.சகாய ரவின்ஸ், அமராவதிவிளை.
நடவடிக்கை தேவை
சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவாசபுரத்தில் அரசு தொடக்கப்பள்ளியின் முன்புறம் பொய்கை அணையின் கால்வாய் செல்கிறது. தற்போது, இந்த கால்வாயை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஊருக்குள் தண்ணீர் வந்து மக்களை பெரும் அச்சத்துக்குள்ளாக்குகிறது. மேலும், விஷப்பாம்புகளும், பூச்சிகளும் பள்ளிக்குள் வர வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜேஷ், விசுவாசபுரம்.
பழுதான குடிநீர் எந்திரம்
கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீரை சுத்திகரிப்பு செய்யும் எந்திரம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நோயாளிகளின் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை மாற்றி விட்டு புதிய எந்திரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.எஸ்.ராஜன், பீச்ரோடு, நாகர்கோவில்.
நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்
நாகர்கோவில் வடசேரி அண்ணாசிலை பகுதியில் நெல்லை உள்ளிட்ட 4 சாலைகள் சந்திப்பு பகுதி என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியில் சந்தை, மீன் மார்க்கெட், வணிக நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு தேவைகளுக்காக அங்கு வரும் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த பகுதியில் பொதுமக்கள் சாலையை சிரமமின்றி கடக்க நடை மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், வடசேரி.