தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம்
கரூர் மாவட்டம், கந்தசாமிபாளையம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புக்கு செல்லக்கூடிய மின்கம்பிகளை தாங்கி நிற்கும் ஒரு மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கந்தசாமிபாளையம்
நடைமேடை சீரமைக்கப்படுமா?
கரூர்-மதுரை பைபாஸ் சாலையில் அமராவதி ஆறு செல்லும் பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் இருபுறமும் நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமேடையின் ஒருசில பகுதிகளில் சிலாப்புகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே உடைந்த சிலாப்புகளை அகற்றி நடைமேடையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கரூர்
குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சியில் உள்ள வெண்ணைமலை, வெ.பசுபதிபாளையம், வங்கி காலனி பகுதிகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு "ஜல்ஜீவன்" திட்டத்தின் கீழ் சுமார் 2000 வீடுகளுக்கு குழாய் மூலம் காவிரி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் 10 நாட்களுக்கு ஒருமுறை மோட்டார் பழுது அல்லது குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வினியோகம் தடைபட்டு வருகிறது. தற்போதும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காதப்பாறை
சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?
கரூர் மாவட்டம், திருக்காடுதுறையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி பெண்களின் நலன் கருதி சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதை அப்பகுதி பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகத்தின் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதனால் அந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார வளாகத்தை சீரமைத்து மீண்டும் திறந்து வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருக்காடுதுறை
குகைவழிப்பாதை அமைக்க வேண்டும்
கரூர் மாவட்டம், நொய்யல் வழியாக தினமும் பயணிகள் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் அடிக்கடி சென்று வருகின்றன. இதன் காரணமாக அடிக்கடி ரெயில்வே கேட் பூட்டப்பட்டு வருவதால் இந்த வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆம்புலன்சுகள், கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் நீண்ட நேரம் வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில்வே கேட் பகுதியில் குகைவழிப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், நொய்யல்