தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
தேங்கி நிற்கும் கழிவுநீர்
கரூர் மாவட்டம், கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள புகழூர் வாய்க்கால் ஓரத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள் கடையில் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த பிளாஸ்டிக் கழிவுகள் அருகிலுள்ள வாய்க்காளுக்குள் விழுந்து வருகிறது. இதனால் வாய்க்காலில் உள்ள கழிவுநீரில் செல்லவழியின்றி தேங்கி நின்று துர்நாற்றமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சரவணன், பாலத்துறை, கரூர்.
விபத்து ஏற்படும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலாப்பழங்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவும் ஒத்திகை மற்றும் குத்தகை முறையில் பலாப்பழங்களை வாங்கி செல்லும் வியாபாரிகள் அவற்றை கூலி தொழிலாளர்கள் மூலமாக பலா மரங்களில் இருந்து பறித்து, அவற்றை சரக்கு லாரிகளில் ஏற்றி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு சரக்கு லாரிகள் மூலமாக பலாப்பழங்களை ஏற்றி செல்லும்போது சரக்கு லாரிகளில் தொழிலாளர்களையும் ஏற்றி செல்வதால் ஏதேனும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வடகாடு, புதுக்கோட்டை.
குண்டும், குழியுமான சாலை
பெரம்பலூர் காமராஜர் வளைவில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.