தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-10-04 17:35 GMT

வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுக்கா மீமிசல் பகுதியில் உள்ள சாலைகளில் ஏராளமான லாரி, பஸ் மற்றுறும் ஆட்டோக்கள் அதிவேகமாக செல்கிறது. இதனால் அந்த சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள், சைக்கிள்களில் செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டும் வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், கோபாலபட்டினம்,

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், ஆவூர் வடக்கு தெருவில் மின்வயர்கள் அருந்து கிடந்தது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று அறுந்து கிடந்த மின்வயர்களை சரி செய்தனர். இதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தினத்தந்தி புகார் பெட்டிக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

பொதுமக்கள், ஆவூர்.

தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் சுற்றுவட்டார பகுதியான ஒலியமங்களம், எம்.உசிலம்பட்டி, மேலத்தானியம், கீழ தானியம், முள்ளிப்பட்டி, இடையாத்தூர், கொன்னையம்பட்டி, ஆலம்பட்டி, நல்லூர், கூடலூர், அரசமலை, மறவாமதுரை, சேரனூர், நெருஞ்சிகுடி, காரையூர் உட்பட15-க்கு மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்துள்ளன. எனவே இப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளுக்கு பொன்னமராவதி மற்றும் இலுப்பூர் பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரவேண்டி உள்ளது. எனவே இக்கிராமங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் தீ விபத்து, பாம்புகளின் தொல்லை, கிணற்றில் ஆடு, மாடுகள் விழுதல் மற்றும் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும் போது விரைந்து செயல்படுவதற்கு ஏதுவாக காரையூரில் தீயணைப்பு நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், காரையூர்

கூடுதலாக பஸ்கள் இயக்க கோரிக்கை

புதுக்கோட்டையில் இருந்து ஆதனக்கோட்டை, சொக்கநாதப்பட்டி, சோத்துப்பாளை, வளவம்பட்டி வழியாக கந்தர்வக்கோட்டைக்கு 4 எண் கொண்ட நகர பஸ் இந்த வழியாக வந்தாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தினந்தோறும் வேலைக்கு செல்பவர்கள் என இந்த வழித்தடத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் இந்த வழித்தடத்தில் கூடுதலாக நகரப்பஸ்களை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வைரமுத்து, ஆதனக்கோட்டை

பன்றிகள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகிறது. இந்த பன்றிகள் அப்பகுதியில் உள்ள குப்பைகளை கிளறி வருகிறது. சில நேரங்களில் வீடுகளுக்குள்ளேயும் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மேட்டுப்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்