தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?
பாளையங்கோட்டை சமாதானபுரம் ரவுண்டானா, ஜான்ஸ் பள்ளிக்கூடம், சேவியர் கல்லூரி அருகில் உள்ளிட்ட இடங்களில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளைநிற வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடைகளுக்கு வெள்ளைநிற வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?
-குருசாமி, வி.எம்.சத்திரம்.
பஸ் வசதி அவசியம்
நாங்குநேரி தாலுகா சிங்கிகுளம் பஞ்சாயத்து மேல்கரை கிராமத்துக்கு பஸ் வசதி இ்ல்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தினமும் 2½ கிலோ மீட்டர் தூரம் நடந்து சிங்கிகுளத்துக்கு சென்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே காலை, மாலையில் அரசு டவுன் பஸ்களை மேல்கரை வழியாக இயக்க வேண்டும். மேலும் அங்கு ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-நம்பிராஜன், மேல்கரை.
கால்வாயை ஆக்கிரமித்த அமலைச்செடிகள்
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் அமலைச்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் கால்வாயில் தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்படுவதுடன் மாசடைகிறது. எனவே கால்வாயை ஆக்கிரமித்த அமலைச்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-ஆறுமுகநயினார், விக்கிரமசிங்கபுரம்.
சுகாதாரக்கேடு
நெல்லை அருகே செங்குளம் பஞ்சாயத்து கீழ ஓமநல்லூரில் பச்சையாற்றின் கரையிலும், அங்குள்ள கிணற்றிலும் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் தண்ணீரில் குப்பைகள் கலந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தேவராஜ், கீழ ஓமநல்லூர்.
எச்சரிக்கை பலகையை மறைத்த மரக்கிளை
கூடங்குளத்தை அடுத்த பொன்னார்குளம் விலக்கின் மேற்கு பகுதியில் வாகன விபத்துகளை தவிர்க்கும் வகையில் சாலையோரம் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டது. அந்த பலகை தாழ்வாக உள்ளதால் புதர் செடிகள், மரக்கிளைகள் மறைக்கின்றன. எனவே எச்சரிக்கை பலகையை சாலையோரமாக மாற்று இடத்தில் உயர்த்தி அமைக்க வேண்டுகிறேன்.
-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
திறந்தவெளி சுகாதார வளாகம்
தூத்துக்குடி 1-ம் ரெயில்வே கேட் பகுதி அருகில் உள்ள மாநகராட்சி சுகாதார வளாகத்தைச் சுற்றிலும் ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்டு தகடாலான தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீசிய சூறைக்காற்றில் தடுப்புகள் சரிந்ததால் சுகாதார வளாகம் திறந்தவெளியாக காட்சியளிக்கிறது. எனவே இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-வேணுராமலிங்கம், தூத்துக்குடி.
தெருநாய்கள் தொல்லை
குரும்பூர் அருகே சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த வழியாக செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-சதாம் ஹூசைன், சேதுக்குவாய்த்தான்.
தவறான பெயர் பலகை
விளாத்திகுளம் அருகே புளியங்குளம் மெயின் ரோட்டில் ஊரின் பெயர் பலகை உள்ளது. இதில் புளியங்குளம் என்று தமிழில் சரியாக எழுதப்பட்டு உள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் 'பிளியங்குளம்' என்று தவறாக எழுதப்பட்டு உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டுகிறேன்.
-மஞ்சுநாதன், மார்த்தாண்டம்பட்டி.
பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?
தூத்துக்குடி புதுக்கோட்ைட, கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயணிகள் நிழற்கூடம் பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. அங்குள்ள இருக்கைகள், மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் நிழற்கூடத்தின் வெளியே நின்றவாறு பயணிகள் பஸ் ஏறி செல்கின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடங்களை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.
-உடையார், தூத்துக்குடி.
மின்தடையால் அவதி
வல்லநாடு அருகே கலியாவூர், உழக்குடி, காலாங்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சீவலப்பேரியில் இருந்து அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக மின்கம்பங்கள் அமைத்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. பலத்த காற்றில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் உரசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்சாதனங்களும் பழுதடைகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-முகமது சுபையர், கலியாவூர்.
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் திப்பணம்பட்டி பஞ்சாயத்து திரவியநகர் வழியாக செல்லும் தென்காசி-அம்பை சாலையோரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. அங்கு அடிக்கடி விபத்துகளும் நிகழுகின்றன. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-ஞானபிரகாசம், பூவனூர்.
சுகாதார வளாகம் திறக்கப்படுமா?
தென்காசி புதிய பஸ் நிலையத்தில் கேரள மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள சுகாதார வளாகம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-அன்பழகன், தென்காசி.
சுகாதாரக்கேடு
கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறம் உள்ள வாறுகால் திறந்த நிலையில் கிடக்கிறது. மேலும் வாறுகாலை தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரவும், அதில் கான்கிரீட் மூடி அமைக்கவும் வேண்டுகிறேன்.
-கவுசிக் ராஜ், அருணாசலபுரம்.
குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு மூடி தேவை
ஆலங்குளம் அருேக கீழ கரும்புளியூத்து மெயின் ரோட்டின் ஓரத்தில் குடிநீர் குழாய் வால்வு தொட்டி திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் எதிர்பாராதவிதமாக தொட்டிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு கான்கிரீட் மூடி அமைக்க வேண்டுகிறேன்.
-நல்லையா, கீழ கரும்புளியூத்து.
ஆரம்ப சுகாதார நிலையத்தை
தரம் உயர்த்த வேண்டும்
திருவேங்கடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலையில் மட்டுமே டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். தாலுகா அந்தஸ்து பெற்ற திருவேங்கடத்துக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். எனவே இங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டுகிறேன்.
-ஆனந்தராஜ், குளக்கட்டாகுறிச்சி.