'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-07-26 18:45 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

நெல்லை- பாபநாசம் இடையே புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சேரன்மாதேவி யூனியன் அலுவலகத்தில் இருந்து ஆர்.சி. நடுநிலைப்பள்ளி வரையிலும் சாலை அமைக்கும் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. இதனால் வாகனங்கள் செல்லும்போது சாலையில் புழுதி பறப்பதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே காலை, மாலையில் சாலையில் தண்ணீர் தெளிக்கவும், சாலை பணிகளை விரைந்து நிறைவேற்றவும் வேண்டுகிறேன்.

-பீர்காதர், சேரன்மாதேவி.

ஆபத்தான மின்கம்பம்

மானூர் தாலுகா செழியநல்லூர் பஞ்சாயத்து தெற்கு செழியநல்லூர் விவசாய நிலங்களில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பங்களை நேராக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-முருகேசன், செழியநல்லூர்.

* திசையன்விளை குமாரபுரம் வடக்கு தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-சிவசுப்பிரமணியன், குமாரபுரம்.

வேகத்தடை தேவை

நெல்லை- அம்பை ரோட்டில் ஆரைக்குளம் பகுதியில் சாலை வளைவில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை, எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் போன்றவை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-காஜா, நெல்லை.

தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

மணிமுத்தாறு பேரூராட்சி கீழ ஏர்மாள்புரம் கிராமத்தில் உள்ள ஆற்றுப்பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் பாலத்தில் தடுப்புச்சுவரும் இல்லாததால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இந்த பாலம் வழியாகத்தான் வைராவிகுளம், சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம், செட்டிமேடு உள்ளிட்ட பகுதி மக்களும் சென்று வருகின்றனர். எனவே ஆபத்தான பாலத்தை உடனே சீரமைத்து தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுகிறேன்.

-சித்தார்த் சிவா, செட்டிமேடு.

புகாருக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம்- நடுவைகுறிச்சி மெயின் ரோட்டில் உள்ள குடிநீர் குழாய் வால்வு தொட்டியின் கான்கிரீட் மூடி சேதமடைந்து திறந்து கிடப்பதாக சுவாமிதாஸ் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குடிநீர் குழாய் வால்வு தொட்டியின் மூடி சீரமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துக்கு இடையூறான கட்டிட கழிவுகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊருணி தெருவில் இருந்து தங்கம்மன் கோவில் செல்லும் சாலையோரம் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டுகிறேன்.

-பாலமுருகன், கோவில்பட்டி.

ஒளிராத தெருவிளக்கு

திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் நாலுமுக்கு சந்திப்பு பகுதியில் தெருவிளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

துவாரம் விழுந்த பாலம்

சாத்தான்குளம் அருகே அச்சம்பாடு கிராமத்தில் உள்ள ஓடை பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. பாலத்தின் இருபுறமும் பெரிய துவாரங்கள் விழுந்துள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான பாலத்தை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-கிங்ஸ்லி, சாத்தான்குளம்.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

கோவில்பட்டி புது ரோடு பகுதியில் நகராட்சி பள்ளி எதிரில், கிறிஸ்தவ ஆலயம் அருகில், பெட்ரோல் பங்க் அருகில் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்புகளை சீரமைத்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-முருகன், கோவில்பட்டி.

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே புறங்காட்டாப்புலியூர் மூன்றுமுக்கு சாலையில் வேகத்தடை, எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என்று விமல்ராஜ் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு வேகத்தடை, எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சுகாதாரக்கேடு

சங்கரன்கோவில் தாலுகா வெள்ளாளங்குளம் பஞ்சாயத்து கரைக்கண்டார்குளம் கிராமத்தில் வாறுகாலில் குப்பைக்கூளங்களாக உள்ளது. இதனால் அதில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-சேர்மக்கனி, கரைக்கொண்டார்குளம்.

எச்சரிக்கை பலகை வேண்டும்

கடையம் அருகே பொட்டல்புதூர் ராமநதி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள 'எஸ்' வளைவு சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு சாலையின் இருபுறமும் எச்சரிக்கை பலகைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-அம்ஜத், முதலியார்பட்டி.

போக்குவரத்துக்கு இடையூறு

புளியங்குடி அரசு ஆஸ்பத்திரி கீழ்புறத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடாமல் போட்டு சென்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான பள்ளத்தை முறையாக மூடுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-சேவியர், புளியங்குடி.

ஊருணி தடுப்புச்சுவர் உயர்த்தப்படுமா?

கடையநல்லூர் நகராட்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள விசாலாட்சி ஊருணி கரையின் தடுப்புச்சுவரானது தெருவோரத்தில் தரைமட்டமாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்கிறவர்கள் மற்றும் கால்நடைகள் ஊருணிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஊருணியின் தடுப்புச்சுவரை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-முருகன், கிருஷ்ணாபுரம்.

Tags:    

மேலும் செய்திகள்