தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
சாலையோரம் வளர்ந்துள்ள முட்செடிகள் அகற்றப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் இருந்து நகரம் வழியாக மாங்காடு செல்லும் வழியில் சாலையின் இரு பக்கத்திலும் முட்செடிகள் சாலையை மறித்து வளர்ந்து நிற்கிறது. மேலும் அந்த சாலையும் குண்டும்-குழியுமான உள்ளதால் ஒதுங்கி கூட செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.
பொதுமக்கள், கீரங்கமங்கலம்.
சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஊராட்சிக்குட்பட்ட கலிபுல்லா நகரில் தனியார் நெல் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கல்லாலங்குடி.
சேதமடைந்த மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அம்மா திடல் பகுதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அன்னவாசல்
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன் விடுதியில் இருந்து நைனான் கொல்லை செல்லும் சாலையின் இருபுறமும் வெட்டன் விடுதி பகுதியில் உள்ள ஓட்டல்கள், இறைச்சி கடைகளின் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இறைச்சி கழிவுகளை தின்பதற்காக நாய்கள் கூட்டம். கூட்டமாக வருகின்றன. இதனால் சாலையில் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் செல்லவேண்டி உள்ளது. மேலும், குப்பைகள், இறைச்சி கழிவுகளால் சுகாதாரகேடு உருவாகி தொற்றுநோய் பரவு வாய்ப்பும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வெட்டன்விடுதி.
தெருநாய்கள் தொல்லை
புதுக்கோட்டை நகரப்பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புதுக்கோட்டை