தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-07-12 18:34 GMT

பாம்புகளால் தொல்லை

கரூர் மாவட்டம் கந்தம்பாளையத்தில் இருந்து கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வழியில் உள்ள முல்லை நகர் பகுதியில் அந்தப் பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டிக்கு அடியில் ஏராளமான புல்கள் முளைத்துள்ளது .அதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள பாம்புகள் இந்த புல்களுக்குள் அடைக்கலம் அடைந்துள்ளது. சில நேரங்களில் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள வீடுகளுக்குள் சென்று அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தொட்டிக்கு அடியில் முளைத்துள்ள புல்களை அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதமக்கள், கந்தம்பாளையம்.

சாலையை சீரமைக்க கோரிக்கை

கரூர் -சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூலிமங்கலம் பிரிவு சாலையிலிருந்து டி.என்.பி.எல். சிமெண்டு ஆலை, டி.என்.பி.எல். காகித ஆலை, மூலிமங்கலம் செல்லும் சாலை போடப்பட்டு சில ஆண்டுகள் ஆகி உள்ளது. இதனால் தார் சாலை நெடுகிலும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக ஆலைகளுக்கு செல்லும் லாரிகள், கார்கள், மோட்டார் சைக்கிளில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மூலிமங்கலம்.

ஊராட்சி சேவை மையம் திறக்கப்படுமா?

கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தில் ரூ.13 லட்சத்தில் ஊராட்சி சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டது. அந்த சேவை மைய கட்டிடம் திறப்பு விழா செய்யப்பட்டும் அது செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது. ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவ ,மாணவிகள், விவசாயிகள் பல்வேறு சான்றிதழ்களை பெறக்கூடிய வாய்ப்பு இருந்தும் திறக்கப்படாததால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் புன்னம் சத்திரம் பகுதிக்குச் சென்று அங்குள்ள சேவை மையத்தில் தங்களுக்கு தேவையான பல்வேறு சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். எனவே புன்னம் ஊராட்சி நிர்வாகம் பசுபதிபாளையத்தில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்து விவசாயிகள் ,பொதுமக்கள், மாணவ ,மாணவிகளுக்கு தேவையான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பசுபதிபாளையம்.

பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை

கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு சாலையில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் பிரிவு சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் பஸ்களில் செல்லும் மக்களின் நலன் கருதி பயணிகள் நிழல் கூடம் கட்டப்பட்டது. இந்த நிழல் கூடம் அருகே எந்த பஸ்களும் நிற்காமல் செல்வதால் ஈரோடு- கரூர் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் பஸ்கள் நின்று செல்வதால் அங்கு பொதுமக்கள் சென்று நின்று பஸ்சில் ஏறி செல்கின்றனர். இதன் காரணமாக மதுபிரியர்கள் இந்த பயணிகள் நிழற்குடைக்குள் அமர்ந்து மதுவை குடித்து விட்டு, பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற் கூடம் அருகே அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நொய்யல்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கரூர் மாவட்டம், மண்மங்கலம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடைக்கு ஒன்று உள்ளது. இந்த நிழற்குடையின் பின்புறம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி, கொசு தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சாலைகளில் வாகன விபத்தில் சிக்கும் நாய்களையும் இந்த குப்பையில் வந்து போட்டு விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மண்மங்கலம்.

Tags:    

மேலும் செய்திகள்