காரைக்குடியில் ரூ.6 கோடியில் நவீன வசதிகளுடன் தினசரி மார்க்கெட்

காரைக்குடியில் ரூ.6 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய தினசரி மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது என நகர்மன்ற தலைவர் கூறினார்.

Update: 2023-08-03 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடியில் ரூ.6 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய தினசரி மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது என நகர்மன்ற தலைவர் கூறினார்.

நகர்மன்ற கூட்டம்

காரைக்குடி நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் முத்துத்துரை தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் குணசேகரன், ஆணையாளர் வீர முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- குணசேகரன் துணை தலைவர்:- இலுப்பக்குடி தேவஸ்தானம், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கு நகராட்சி வரி விதிப்பு செய்ய வேண்டும் அதன் மூலம் நகராட்சியின் வருவாய் உயரும். தலைவர் முத்துத்துரை:- தேவஸ்தான இடங்களில் உள்ள வசிப்பிடங்களுக்கு வரி விதிக்க இயலாது. இதுகுறித்து மாநில அரசுதான் முடிவு செய்ய இயலும். இப்பிரச்சினை தமிழ்நாடு முழுவதும் உள்ளது. மற்ற இடங்களில் வசிப்போர் வருவாய் துறையினரிடம் பட்டா பெற்று வந்தால் வரிவிதிப்பு குறித்து பரிசீலிக்கலாம்.

நாகராஜன்:- குடிநீர் வினியோக நேரத்தை நீட்டிக்கவேண்டும். காரைக்குடி தெற்கு பகுதியிலிருந்து மாவட்ட தலைமை மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். கலா:- பருப்பூரணி பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

தினசரி மார்க்கெட்

பிரகாஷ்:- கே.எம்.சி. காலனி குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். நகராட்சிக்கு மினி பொக்லைன் வாங்க வேண்டும். நகர் மன்ற தலைவர் முத்துத்துரை:- அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பொது நிதியிலிருந்து ரூ.3 கோடியே 96 லட்சத்து 95 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

ரூ.6 கோடி மதிப்பீட்டில் கழனி வாசல் சாலையில் உள்ள வாரச்சந்தை அதிநவீன வசதிகளுடன் கூடிய தினசரி மார்க்கெட்டாக மாற்றப்பட உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். கூடுதலான வசதிகளோடு 2 நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்கப்பட உள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் சுகாதார பணிகளை மேற்கொள்ள பேட்டரி வாகனம் வழங்கப்படும். குறைந்த அழுத்த மின்சாரத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் கூடுதல் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு விவாதம் நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்