புயல் பாதுகாப்பு உபகரணங்கள் தயார்

கூத்தாநல்லூர் நகராட்சியில் புயல் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் இருந்தது.

Update: 2022-12-09 19:00 GMT

கூத்தாநல்லூர்;

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை மற்றும் சூறைக்காற்று வீசி வருகிறது. மேலும், புயலை எதிர்கொள்ள அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், மாண்டஸ் புயலை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதனால், நகர பகுதிகளில் உள்ள விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு, சுகாதார பணிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு சீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகரசபை தலைவர் பாத்திமா பஷீரா நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-"வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் கூத்தாநல்லூர் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. புயலை எதிர்கொள்ள நகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புயலால் மரங்கள் சாய்ந்தாலோ மற்றும் வார்டு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றாலோ உடனுக்குடன் சீரமைப்பு செய்வதற்கு மரம் அறுக்கும் எந்திரங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.'இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது நகராட்சி என்ஜினியர் சந்திரசேகரன், நகரசபை உறுப்பினர் மாரியப்பன் மற்றும் சுகாதார அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்