மிக்ஜம் புயல் நிவாரணம்: ரேஷன் அட்டை இல்லாதவர்களின் வங்கி கணக்கில் ரூ.6,000 வரவு
ரேஷன் அட்டை இல்லாமல் மிக்ஜம் புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் ரூ.6,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.;
சென்னை,
மிக்ஜம் புயல் நிவாரணத் தொகைக்கு, ரேஷன் அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், சென்னையைச் சேர்ந்தவர்களது வங்கிக் கணக்கில் ரூ.6,000 வரவு வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிக்ஜம் புயல் நிவாரணத் தொகை கேட்டு, குடும்ப அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தகுதியுள்ளோருக்கு ரூ.6,000 வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறப்படுகிறது.
சென்னையில் முழுமையாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பகுதியாகவும் மிக்ஜம் புயல் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. கனமழையால் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொருட்கள் கடுமையாகச் சேதம் அடைந்தன.
இதையடுத்து, புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணமாக ரூ.6 ஆயிரம் அளிக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, டோக்கன்கள் அடிப்படையில் வீடுகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.
புயல் நிவாரணம் கிடைக்கப் பெறாதவர்கள், மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்பட்டன. விண்ணப்பங்களை குடும்ப அட்டைதாரர்கள் பூர்த்தி செய்து அளித்தனர்.
அதுபோல, ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் அனைத்தும் பிரத்யேக கைப்பேசி செயலியில் பதிவிடப்பட்டு, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகள் முன்பாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டு பயனாளிகளின் இருப்பிடமும் உறுதி செய்யப்பட்டு வந்தது.
விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.6,000 வரவு வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விவரங்கள் பயனாளிகளின் கைப்பேசி வழியே தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.