அசல் ஆவணங்கள் கொள்ளை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மீது சி.வி.சண்முகம் போலீசில் புகார்
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அசல் ஆவணங்கள், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொள்ளையடிக்கபட்டு உள்ளதாக சி.வி.சண்முகம் போலீசில் புகார் அளித்துள்ளார்.;
சென்னை
கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தின் போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீலை அகற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களுக்குப் பின் கடந்த 20ஆம் தேதி சென்னை ஐகோர்ட்டு தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி 21ஆம் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. . முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க.வினர் அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றனர். அப்போது, அலுவலகத்தினுள் ஆவணங்களும், பொருட்களும் கீழே சிதறியிருந்தது.
அலுவலகத்தை திறந்து பார்வையிட்டபின், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவிற்கு வந்த பரிசுப் பொருட்களும், சில விலை உயர்ந்த பொருட்களும் காணமல் போயுள்ளது என்று இ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சென்னை இராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார்.
கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரம், 31 ஆயிரம் ரொக்கப்பணம், 2 கம்ப்யூட்டர், வெள்ளி வேல், முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கட்சிக்கு வாங்கப்பட்ட 37 வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்கள், அதிமுக - பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை அசல் பத்திரம், அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் என பல்வேறு ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக சி.வி.சண்முகம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.