தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் வாடிக்கையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கயத்தாறு அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் வாடிக்கையாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்

Update: 2022-06-01 15:28 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் வாடிக்கையாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

கூட்டுறவு வங்கி

தூத்துக்குடி மாவட்டம் வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 600-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஒரேநாளில் நகை கடன் பெற்றனர். அப்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணம் இல்லாததால் பாண்டு பத்திரம் வழங்கப்பட்டது.

அதன்பின்பு வங்கியில் இருந்து, நகை கடன் பெற்ற அனைவருக்கும் வட்டி கட்டக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வங்கியில் பணம் வாங்காமல் வட்டி கட்ட நோட்டீஸ் அனுப்பியதால் வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டம் மற்றும் நாற்கர சாலையில் மறியல் செய்தனர். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என கூறினர். இதனால் போராட்டங்கள் கைவிடப்பட்டன.

காத்திருப்பு போராட்டம்

ஆனால் இதுவரை இதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி வாடிக்கையாளர்கள் நேற்று வங்கியின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

தகவல் அறிந்ததும் கோவில்பட்டியை சேர்ந்த கூட்டுறவு வங்கி மாவட்ட பதிவாளர் டி.ஆர்.பாலகிருஷ்ணன், அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், வருகிற 21-ந்தேதிக்கு பின்னர் வங்கியில் நகை கடன் பெற்ற பாண்டு பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு வட்டி இல்லாமல் நகைகளை திருப்பி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்