கடலூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
ஓய்வுபெற்ற பேராசிரியருக்கு தவறான வில்லங்க சான்றிதழ் வழங்கிய கடலூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 61), ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர் கடலூர் கோண்டூர் அருட்தந்தை ரட்சகர் நகரில் கடந்த 1996-ம் ஆண்டு விஜயலட்சுமி என்பவரிடம் வீட்டு மனையை வாங்கியுள்ளார். பின்னர் 1997-ல் வில்லங்க சான்றிதழ் பெற்ற போது, அதில் மனையின் உரிமையாளர் ராமமூர்த்தி மட்டுமே என்றும், வில்லங்கம் எதுவும் இல்லையென்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ராமமூர்த்தி கடந்த 2015-ம் ஆண்டு தனது மகளின் படிப்பு செலவிற்காக அந்த மனையை விற்க முடிவு செய்து, வில்லங்க சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்தார்.
அப்போது வழங்கப்பட்ட வில்லங்க சான்றிதழில் ராமமூர்த்தி அந்த இடத்தின் உரிமையாளர் என்றும், ஆனால் அந்த வில்லங்க சான்றிதழில் 1997-ல் ராமமூர்த்திக்கு விற்ற விஜயலட்சுமி என்பவர் அதே மனையை ஆனந்த் பாபு என்பவரிடம் கிரைய ஒப்பந்த உடன்படிக்கை செய்துள்ளதாகவும், அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ராமமூர்த்தி, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
வில்லங்க சான்றிதழ்
இதுதொடர்பாக விசாரித்த அப்போதைய மாவட்ட பதிவாளர், விஜயலட்சுமி, ஆனந்த்பாபு ஆகியோர் ஆஜராகாததால் அந்த ஆணையை ரத்து செய்ய முடியாது என்றும், அதை வில்லங்கத்தில் இருந்து நீக்க முடியாது எனவும் கூறி, வில்லங்க சான்றிதழ் கொடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட ராமமூர்த்தி, கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதன் விசாரணை நுகர்வோர் மன்றத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ரூ.50 ஆயிரம்
அதில் தவறான வில்லங்க சான்றிதழை வழங்கியது ஒரு சேவை குறைபாடு எனவும், அதற்கு கடலூர் இணை சார் பதிவாளர் மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் தான் பொறுப்பு. எனவே மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் கடலூர் இணை சார் பதிவாளர், வாடிக்கையாளருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், அவருக்கு வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.