கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்குகழுத்தில் மண்வெட்டி, பாத்திரத்தை மாலையாக அணிந்து வந்த வியாபாரி

கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வியாபாரி ஒருவர் கழுத்தில் மண்வெட்டி, பாத்திரத்தை மாலையாக அணிந்து கொண்டு வந்து மனைவிக்கு 100 நாள் வேலை வழங்க மறுப்பதாக புகார் அளித்தார்.

Update: 2023-08-21 19:09 GMT

குறிஞ்சிப்பாடி அருகே கருங்குழி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். வியாபாரி. நேற்று இவர், தனது மனைவி சுகுணாவுடன் கோரிக்கை அட்டையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது ராஜேந்திரன் தனது கழுத்தில் மண்வெட்டி மற்றும் மண் அள்ளுவதற்கான அகன்ற பாத்திரத்தை மாலையாக அணிந்திருந்தார். தொடர்ந்து அவர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரனிடம் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- கருங்குழி ஊராட்சியில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் என்னுடைய மனைவிக்கு வேலை கேட்டு கடந்த 1.4.2022 அன்று விண்ணப்பித்தேன். ஆனால் இதுவரை என்னுடைய மனைவிக்கு வேலை வழங்கவில்லை. நான் பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் வேலை வழங்கவில்லை. வேலை அட்டை பதிவும் செய்யவில்லை. ஆனால் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேலை செய்ததாக கூறி பதிவு செய்து முறைகேடு செய்துள்ளனர். சிலர் வேலைக்கு வராமலே, வேலை செய்ததாக முறைகேடாக பணபரிவர்த்தனை செய்துள்ளனர். ஆகவே இது போன்ற முறைகேடுகள் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, என்னுடைய மனைவிக்கு இந்த திட்டத்தில் வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்