கல் உப்பு விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி

பருவமழை சீசனை தொடர்ந்து கல் உப்புகள் விலை உயர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-12-20 18:45 GMT

பனைக்குளம், 

பருவமழை சீசனை தொடர்ந்து கல் உப்புகள் விலை உயர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பருவமழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. அதற்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி தொழிலும் மாவட்டத்தில் அதிகமாகவே நடைபெற்று வருகின்றது. குறிப்பாக சாயல்குடி அருகே வாலிநோக்கம், ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, ஆனைகுடி மற்றும் தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் ஆகும்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியதில் இருந்தே கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள உப்பள பாத்திகள் முழுவதும் மழை நீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது.

விலை உயர்வு

இதனிடையே கோப்பேரிமடம் பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பள பாத்திகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கல் உப்புகள் மழை நீரில் நனையாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மூடி வைக்கப்பட்டுள்ள கல் உப்புகள் அவ்வப்போது லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள உப்பு கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இது குறித்து உப்பு வியாபாரி ஒருவர் கூறும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உப்பு விளைச்சல் அதிகமாகவே இருந்தது. கடந்த அக்டோபர் மாதம் வரையிலும் 1 டன் உப்பு ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே விலை போனது. ஆனால் தற்போது மழை சீசன் நடந்து வருவதால் ஒரு டன் கல் உப்பானது ரூ.3500-ல் இருந்து 4000 வரை விலை போகின்றது. இன்னும் அதிக மழை பெய்யும் பட்சத்தில் உப்பின் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளது.

பொடி உப்பு

கோப்பேரிமடம் பகுதியில் உள்ள பாத்திகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கல்உப்புகள் தூத்துக்குடியில் உள்ள கம்பெனிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு கல்உப்புகள் முழுமையாக சுத்தம் செய்து மிஷினில் அரைத்து பொடியாக்கப்பட்டு பொடி உப்பாக பாக்கெட்டுகளில் அடைத்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்