நீதிபோதனை வகுப்புகள் நிறுத்தப்பட்டதால் குற்றங்கள் கூடுகிறது - தருமபுரம் ஆதீனம்...!
நீதிபோதனை வகுப்புகள் நிறுத்தப்பட்டதால் குற்றங்கள் கூடுகிறது என தருமபுரம் ஆதீனம் தெரிவித்து உள்ளார்.
ஆரல்வாய்மொழி,
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் அகலிகை ஊற்று தெருவில் சாமகானப்பிரியன் பேரிகைக்குழு செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் திருவாவடுதுறை ஆதின மடத்தில் வைத்து சமய மற்றும் தேவார, பரதநாட்டிய வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இப்பேரிகை குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தருமபுரம் ஆதினம் 27 -வது குருமகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் ஆரல்வாய்மொழிக்கு வந்தார்.
முதலில் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து திருவாவடுதுறை ஆதின மடத்திற்கு சென்றார். அங்கு சாமகானப்பிரியன் பேரிகைகுழு சார்பில் சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள கோவில்களில் தரிசனம் செய்து பக்தர்கள் மத்தியில் சமய சொற்பொழிவு ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
மாணவ செல்வங்கள் நல்ல கல்வியை படிக்க வேண்டும். நீதிபோதனை வகுப்புகள் நிறுத்தப்பட்டதால் குற்றங்கள் கூடுகிறது. குடும்ப நிகழ்வுகளில் சமயத்தை பற்றி சொல்லவேண்டும், சைவசித்தாந்த வகுப்புகள் நடத்தபடவேண்டும். தேவாரம் படிப்பதன் மூலம் வாழக்கையின் தேவையானவற்றை தெரிந்துகொள்ளலாம். மலட்டு பசுவிடம் பால்கரக்கமுடியாது.
அதுபோலதான் கொடுக்க வேண்டாம் என்று இருப்பவனிடம் எதையும் பெற முடியாது. இறைவனை நாவாரப்பாடினால் எல்லாம் கிடைக்கும். உளவார பணிகள் செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.