நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள கடலையூர் கிராமத்தில் ராடன் லைக்கன்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் 2 நாட்கள் சிவக்காடு மைதானத்தில் நடைபெற்றது. தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் குருசாமி, கடலையூர் பஞ்சாயத்து தலைவர் திராவிட செல்வி மாரியப்பசாமி, ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்ற மந்திதோப்பு அணிக்கு ரூ.12 ஆயிரம் பரிசு தொகையை அரசு முதன்மை ஒப்பந்ததாரர் தங்கராஜ் வழங்கினார். 2-வது இடத்தை பிடித்த கடலையூர் அணிக்கு ரூ.8 ஆயிரம் பரிசு தொகையை அ.ம.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயபாஸ்கர், அ.ம.மு.க. ஊராட்சி கழக செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் வழங்கினர். 3-வது இடத்தை பிடித்த தோணுகால் அணிக்கு ரூ.5 ஆயிரம் பரிசு தொகையை கோவில்பட்டி அரசு ஒப்பந்ததாரர் மாரியப்பனும், வழங்கினார். 4-வது இடத்தை பிடித்த மேல் ஈரால் அணிக்கு ரூ.3 ஆயிரம் பரிசு தொகையை சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி ஆகியோரும் வழங்கி பாராட்டினர். இதில் ச.ம.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பூமிபாலகன், கிளை செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் ஜோதிமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.