மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி; திண்டுக்கல், தஞ்சாவூர் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல், தஞ்சாவூர் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது.

Update: 2022-08-07 17:38 GMT

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பி.ஆர்.தேவர் கோப்பைக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான போட்டி பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. 16 வயதுக்குட்பட்டோருக்கான இப்போட்டியில் பங்கேற்றுள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் ஏ, பி, சி, டி, இ, எப், ஜி, ஹச் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'சி' பிரிவில் திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சாவூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய 5 அணிகள் இடம்பெற்று விளையாடி வருகின்றன. 50 ஓவர்கள் அடிப்படையில் நடைபெறும் இப்போட்டியில், திண்டுக்கல் அணி 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பெற்றிருந்தது.

இந்தநிலையில் நேற்று திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரி மைதானத்தில் திண்டுக்கல்-கள்ளக்குறிச்சி அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி வீரர்கள், எதிரணி வீரர்களின் பந்துவீச்சை நாலாப்புறமாக சிதறவிட்டு அதிரடியாக விளையாடினர் 49 ஓவர்களில் அந்த அணி 295 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. திண்டுக்கல் அணிவீரர் நரேன்விமல் 50 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். முகமது பாகிம் 50 ரன்கள் எடுத்தார். பின்னர் 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கள்ளக்குறிச்சி அணி 33 ஓவர்களில் 91 ரன்களில் ஆல்-அவுட் ஆகியது. இதன்மூலம் திண்டுக்கல் அணி 204 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் அணி, 2-வது இடம் பிடித்த தஞ்சாவூர் அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றன.

இதற்கிடையே தாடிக்கொம்பு ஸ்ரீவி கல்லூரி மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் ராமநாதபுரம்-நீலகிரி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த நீலகிரி அணி 46.3 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கைநோக்கி களமிறங்கிய ராமநாதபுரம் அணி 42 ஓவர்களில் 111 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

Tags:    

மேலும் செய்திகள்