புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் விரிசல்
புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் விரிசல்
செங்கிப்பட்டியில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வரை உள்ள மாநில நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் முடிவடையும் நிைலயில் உள்ளது. திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள சிறு பாலங்கள் புதிதாக அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே மாத இறுதியில் விண்ணமங்கலத்தில் இருந்து அடஞ்சூர் பிரிவு வரை புதிதாக தார்ச்சாலை போடப்பட்டு சாலையின் நடுவில் மற்றும் சாலையின் இரு புறங்களிலும் வெள்ளை வண்ண கோடுகளும் போடப்பட்டன. கொள்ளிடம் ஆற்றில் இரண்டு இடங்களில் மணல் குவாரிகள் உள்ளன. இதனால் அந்த சாலை வழியாக ஏராளமான மணல் லாரிகள் சென்று கொண்டே இருக்கும். தற்போது விண்ணமங்கலத்தில் இருந்து அடஞ்சூர் பிரிவு வரை புதிதாக போடப்பட்டுள்ள தார்ச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் சில மாதங்களிலேயே விரிசல் ஏற்பட்டு இருப்பது அதன் தரம் குறித்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது. எனவே சாலையின் தரத்தை உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.