பாறைக்கு வெடி வைத்ததால் வீடுகளில் விழுந்த விரிசல் - ஈரோட்டில் பரபரப்பு

நிலத்தை சமன்படுத்தும் பணியின்போது வெடி மருந்துகளை பயன்படுத்தி பாறைகளை தகர்த்துள்ளனர்.

Update: 2024-06-23 13:24 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோடு நான்கு சாலை சந்திப்பில் இருந்து பவானி செல்லும் சாலையில் உள்ள பாரதிபுரம் நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் இந்த குடியிருப்புக்கு பின்புறம் சண்முகராஜா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பாறைகள் அதிகம் உள்ளதால் நிலத்தை சமன்படுத்தும் பணியின்போது வெடி மருந்துகளை பயன்படுத்தி இரவு பகலாக பாறைகளை வெடி வைத்து தகர்த்துள்ளனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட புதிதாக கட்டப்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நிலத்தை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டவர்களிடம் முறையிட்டும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பாறைகளுக்கு வெடிவைத்து தகர்த்து வந்தனர்.

இதன் காரணமாக வெடி மருந்துகள் வீட்டின் மொட்டை மாடியில் சிதறிக் கிடந்ததுடன் வெடி மருந்து துகள்களும் வீடுகளுக்குள்ளே விழுந்து உள்ளது. இதனை தொடர்ந்து வீடுகளில் அதிக அளவில் சேதம் ஏற்படுவதாக கிராம நிர்வாக அலுவலரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த கிராம நிர்வாக அலுவலர், காவல்துறைக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் சித்தோடு காவல்துறையினர் உரிய அனுமதியின்றி வெடிமருந்துகளை பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து வெடிமருந்துகள் எங்கிருந்து வாங்கப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வீடுகளில் ஏற்பட்ட விரிசலுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாறைக்கு வெடி வைத்ததால் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்