பொங்கல் பண்டிகை முடிந்து நேற்று மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக கருதி நேற்று அவற்றுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
நேற்று காலையில் மாடுகளை நீர் நிலைகளுக்கு அழைத்து சென்றும், வீடுகளில் தண்ணீர் ஊற்றியும் குளிப்பாட்டினர். பின்னர் கொம்புகளுக்கு எண்ணெய், வர்ணம் பூசி அழகுபடுத்தினர். மாடுகளுக்கும், மாட்டு தொழுவத்திலும் சாம்பிராணி புகை போட்டனர். மாடு வளர்க்கும் பகுதியில் பொங்கலிட்டனர். பின்னர் மாடுகளை வரிசையாக நிறுத்தி வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, பனங்கிழங்கு, பழம் ஆகியவற்றை கொடுத்தனர்.