மத்திய அரசு திட்டத்தில் முறைகேடு செய்ததாக வழக்கு - தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

வழக்கு விசாரணையை பிப்ரவரி 20-ந் தேதிக்கு ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.

Update: 2024-01-04 17:21 GMT

சென்னை,

திருவண்ணாமலை மாவட்டம் சக்கரத்தாமடையைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திருவண்ணாமலை மாவட்டம் சு.நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா மற்றும் அவரது கணவர் கார்த்திகேயன் ஆகியோர், பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்துவதில் முறைகேடுகள் செய்து நிதியை கையாடல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் மீனா, அவரது கணவர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மனு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசும், லஞ்ச ஒழிப்புத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்