உரிய காலத்திற்கு பதில் மனு தாக்கல் செய்யாததால் நேரில் ஆஜரான ஐ.ஏ.எஸ்.அதிகாரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட்டு உத்தரவு
உரிய காலத்திற்கு பதில் மனு தாக்கல் செய்யாததால் நேரில் ஆஜரான ஐ.ஏ.எஸ்.அதிகாரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் அந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலத்தை பணி நிரந்தரம் செய்து வரன்முறை செய்யக்கூடிய வழக்கில் பல வருடங்களாக பதில் மனு தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. இந்த மனு நீதிபதி பட்டுதேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராக கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
பின்னர் அவர் நேரில் வராததால் பிடிவாரண்ட் பிறப்பித்து, அவரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி மீண்டும் உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனருமான பொன்னையா நேற்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு ஆஜரானார்.
அப்போது பல்வேறு பணிகள் காரணமாக அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும், கோர்ட்டு உத்தரவை முறையாக பின்பற்றுவதாகவும், அத்துடன் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும், பிடிவாரண்டை திரும்ப பெற வேண்டும் என்றும் அரசுத்தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு பல ஆண்டுகள் கடந்த பின்னரும் பதில் மனு தாக்கல் செய்யாததால், மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தனியார் முதியோர் இல்லத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.