சிறுநீரக நோயால் அவதிப்படும் ஆயுள் கைதிக்கு 3 மாதம் இடைக்கால ஜாமீன் -ஐகோர்ட்டு உத்தரவு
சிறுநீரக நோயால் அவதிப்படும் ஆயுள் கைதிக்கு 3 மாதம் இடைக்கால ஜாமீன் -ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
கோவை பேரூர் பகுதியைச்சேர்ந்தவர் விஜயன் என்ற விஸ்வநாதன். கொலை வழக்கில் கோவை கோர்ட்டு இவருக்கு ஆயுள்தண்டனை விதித்த நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அவர், தற்போது சாதாரண சிறை விடுப்பில் இருந்து வருகிறார். இந்தநிலையில் விஜயனின் மனைவி சித்ரா சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், தனது கணவர் 17 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டியது உள்ளது. எனவே, நன்னடத்தை அடிப்படையில் அவரை முன்கூட்டியே விடுவிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர்மோகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'நன்னடத்தை அடிப் படையில் சிறையில் உள்ள கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழக அரசின் பரிந்துரைக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆயுள் கைதி விஜயனை ஜாமீனில் விடுவிப்பதில் அரசுக்கு ஆட்சேபம் இல்லை' என்றார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், 'ஆயுள் கைதி விஜயனுக்கு 3 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. விஜயன், மாதம் ஒருமுறை பேரூர் போலீஸ்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என உத்தரவிட்டார்.