கடன் பிரச்சினையால் விஷம் குடித்த தம்பதி

கோவை சேரன்மாநகர் பகுதியில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்தனர். இதில் கணவர் உயிரிழந்தார். மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-02-23 18:45 GMT

பீளமேடு

கோவை சேரன்மாநகர் பகுதியில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்தனர். இதில் கணவர் உயிரிழந்தார். மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் நிறுவன ஊழியர்

கோவை அருகே உள்ள சேரன்மாநகரை சேர்ந்தவர் விபின் (வயது 34), தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி ரம்யா (29), இவர்களுக்கு 2½ வயதில் பிரவி கிருஷ்ணா என்ற ஆண் குழந்தை உள்ளது.

விபினுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தனக்கு தெரிந்த பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த வகையில் அவர் ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுறது.

கடன் பிரச்சினை

அந்த பணத்தை அவர் திரும்ப செலுத்த முடியாமல் அவதி அடைந்து வந்தார். கடன் கொடுத்தவர்கள் அவரிடம் கடனை கேட்டு தொல்லை கொடுக்கவில்லை என்றாலும், வாங்கிய கடனை எப்படி செலுத்த போகிறோம் என்று மிகவும் வேதனையில் இருந்து உள்ளார்.

இதை அவர் தனது மனைவி ரம்யாவிடம் கூறி உள்ளார். நம்மால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாது என்ற நிலைக்கு வந்த 2 பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து விபின் தனது குழந்தையை, சகோதரர் வீட்டில் விட்டு வந்தார்.

விஷம் குடித்த தம்பதி

பின்னர் 2 பேரும் நேற்று முன்தினம் விஷம் குடித்தனர். அப்போது வீட்டைவிட்டு வெளியே வந்த விபின், வாந்தி எடுத்தபடி இருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரிடம் விசாரித்தபோது, தானும், மனைவியும் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார்.

உடனே அவர்கள் விபினின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் விஷம் குடித்த தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

கணவர் சாவு

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி விபின் பரிதாபமாக உயிரிழந்தார். ரம்யாவுக்கு தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையில் கடன் பிரச்சினை காரணமாக தம்பதி விஷம் குடித்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்