நாட்டு நாவல் பழ விற்பனை விறுவிறுப்பு

நாட்டு நாவல் பழ விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

Update: 2023-08-06 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஒட்டுரக ஜம்பு நாவல் பழங்கள் விற்பனை அதிகளவில் இருந்தது. அவைகள் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியதாக இல்லாதபோதும் மக்கள் அதன் சுவை கருதி வாங்கி சாப்பிட்டனர். வழக்கமான நாட்டு நாவல் பழங்களின் வரத்து தற்போது தொடங்கிய நிலையில் ஜம்பு நாவல் பழங்களின் வரத்து ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. மாவட்டத்தில் அதிக சுவையும், உடலுக்கு நன்மையும் அளிக்க கூடிய நாட்டு நாவல் பழ விற்பனை அதிகளவில் உள்ளது. இன்னும் முழுமையான சீசன் தொடங்காத நிலையிலும் அதிக விளைச்சல் காரணமாக நாட்டு நாவல்பழ விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

மாவட்டத்தில் அதிகளவில் நாவல் பழ மரங்கள் உள்ளதால் அதில் உள்ள நாவல் பழங்களை எடுத்து வந்து பெண்கள் தெருக்களில் விற்பனை செய்கின்றனர். சிலர் வியாபாரிகள் மூலம் வாங்கி வந்து கூறுகட்டி விற்கின்றனர். படி கணக்கில் விற்பனை செய்யப்படும் நாட்டு நாவல் பழம் ரூ.20 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது.

இதுகுறித்து பெண் வியாபாரி ஒருவர் கூறியதாவது:- ஒட்டுரக நாவல் உடலுக்கு நன்மை கிடையாது. சுவை மட்டுமே இருக்கும். ஆனால் நாட்டு நாவல் பழம் கனிந்து அதிக சுவையுடன் இருக்கும். உடலுக்கு நன்மை தரக்கூடியது. பல்வேறுநோய்களுக்கு மருந்தாக உள்ளது. பித்தத்தை குறைத்து மலச்சிக்கலை குணப்படுத்தும். இதுதவிர இதில் உள்ள துவர்ப்பு தன்மை சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுவதோடு ரத்த உற்பத்தியை ஏற்படுத்தும் என்பதால் வயதானவர்கள் அதிகளவில் வாங்கிசெல்கின்றனர். சீசன் முழுமையாக தொடங்காவிட்டாலும் அதிக வரத்து காரணமாக விற்பனை நன்றாக உள்ளது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்